செய்திகள்

”வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான விசாரணைகளை தொடர்வதில்லை”:சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என்று சட்டமா அதிபரினால் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 – 2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 14 ஆவது பிரதிவாதியாக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது தமது திணைக்களம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்திற்கு எதிராக பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை, குற்றச்சாட்டு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்றும் இதன்படி விசாரணைகளை தொடர எதிர்பார்க்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்கு சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அன்றைய தினத்தில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)