செய்திகள்

‘வடக்கின் பெரும் போர்’ 2 ஆம் நாள் ஆட்டம்: பரியோவான் கல்லூரி ஆதிக்கம்

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான யாழ் மத்திய கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான வடக்கின் பெரும் துடுப்பாட்டப் போட்டியின் இன்றைய இரண்டாம் நாளன்று யாழ். மத்திய கல்லூரி தனது முதலாவது இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. நேற்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 300 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தி, மத்திய கல்லூரியை துடுப்பெடுத்தாடுவதற்கு கேட்டிருந்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி விக்கெட் இழப்பு எதுவும் இன்றி 9 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியபோது மத்திய கல்லூரி தனது விக்கட்டுக்களை விரைவாக இழக்கத்தொடக்கி, மதிய போசனத்தின் பின்னர் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. ஒரு சந்தர்ப்பத்தில் 95 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்த மத்திய கல்லூரி பின்னர் 69 ஓட்டங்களுக்கு மிகுதி 6 விக்கெட்டுக்களையும் விரைவாக பறிகொடுத்தது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பரியோவான் கல்லூரி 6 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய நிலையில் பரியோவான் கல்லூரி 239 ஓட்டங்களை கூடுதாலாக பெற்றுள்ளது.

நாளை, இறுதியும் 3 ஆம் நாள் ஆட்டமும் தொடங்கவுள்ள நிலையில், பரியோவான் கல்லூரி மத்திய கல்லூரியை துடுப்படுத்தாட பணிக்கலாம் அல்லது சிறிது நேரம் துடுப்பெடுத்தாடிவிட்டு மத்திய கல்லூரியை துடுப்படுத்தாட பணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் பரியோவான் கல்லூரிக்கு சாதகமாக இருக்கின்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி தோல்வி ஏற்பப்டுவதற்கான சந்தர்ப்பம் கூடுதலாக இருப்பதால் நாளைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும் இந்த துடுப்பாட்ட போட்டியினை கண்டுகளிக்க இரு கல்லூரிகளினதும் ஏராளமான பழைய மாணவர்கள் நாட்டில் பல பாகங்களிலும் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளனர்.

1 34