செய்திகள்

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்

உங்கள் கருத்து தவறானது. தமிழ் மக்கள் கூட்டணி என்பது தமிழ் மக்கள் பேரவையின் ஒரு அலகோ அல்லது பரிமானமோ அல்ல, நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது நிச்சயமாக மாற்றங்களை செய்யமுடியும், நாம் எல்லாவற்றையும் முயற்சித்து விட்டோம். இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறுவது தவறு, மக்களின் ஆலோசனைகளும் பங்குபற்றுதலுமே உண்மையான பலமாகும், உண்மைக்கு பலம் அதிகம். அதனால் தான் சிங்கள அரசியல்வாதிகள் தமது மக்களை இன்னமும் இருட்டில் வைத்திருக்கிறார்கள், அரசாங்கம் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பற்றி கதைப்பது முதலை கண்ணீர் வடிக்கும் செயல் , நாம் அரசியல் ரீதியாக பலம் பெறும் போது இது மீண்டும் சாத்தியமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது, தமது பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு கிழக்கில் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை தமக்கு இருக்கிறது என்ற எமது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையே ” தமிழ் தேசியம் “. போன்ற பல கருத்துக்களை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் CV விக்னேஸ்வரன் தெரிவித்துளார்.

நேற்று சனிக்கிழமை சிட்னியில் இருந்து இயங்கும் தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவைக்கு வழங்கிய நேர்காணணலிலேயே அவர் இக் கருத்துக்களை தெரிவித்தார். அவரது முழுமையான நேர்காணலை கீழே காணலாம்.

அரசியற் கட்சி ஒன்றை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்திருக்கும் நீதியரசர் CV விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் முன்னெடுப்புகள், இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் குறித்த அவரது பார்வை, முன்னைநாள் முதலமைச்சர் வடக்கு மாகாண சபையின் உச்சப் பொறுப்பில் இருந்தபோது அவர் செய்த பணிகளும் அவற்றினூடாக அவர் பெற்ற அனுபவங்களும் மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியும் போன்ற பல விடயங்கள் இந்த நேர்காணலில் பேசப்பட்டுள்ளன.

“இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்கும் எந்த அரசுடனும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தீர்வை அடையப் பாடுபட வேண்டும்” என்று சொல்கிறீர்கள்.இப்போது உள்ள நிலைமையில் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தெற்கில் உள்ள எந்த அரசியல் அமைப்பு தயாராக இருக்கிறது? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விக்னேஸ்வரன் இவ்வாறு பதில் அளித்தார்:

நாம் பலமாக இருந்தபோது வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர். நாம் அரசியல் ரீதியாக பலம் பெறும் போது இது மீண்டும் சாத்தியமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. எமது ஒற்றுமையும் ஒன்றுபட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளும் எமது அரசியல் பலத்தை கூட்டலாம். உலகளாவிய தமிழ் மக்களின் ” தமிழ் ” என்ற அடையாளத்தின் மூலமான ஒருங்கிணைவு எமது பலத்தை கூட்டலாம். முஸ்லிம் சகோதரர்களுடனான ஒருமித்த நிலைப்பாடுகள் எமது பலத்தை கூட்டலாம். எமது மக்களின் பொருளாதார மேன்மை எமது அரசியல் பலத்தை கூட்டலாம். சர்வதேச நாடுகளுடனான எமது உறவு எமது பலத்தை கூட்டலாம். எமது புலம்பெயர் இளம் சமுதாயத்தினரின் அறிவும் அவர்களின் பொறுப்புமிக்க சர்வதேச பதவிகளும் எமது பலத்தை கூட்டலாம். இவ்வாறு பல வழிகள் இருக்கின்றன.

“இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கோட்பாடுகளை கைவிட்டு தடம்புரண்டு நிற்கின்றது” என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்த் தேசியம் என்பதற்கு பலர் வேறுபட்ட வியாக்கியானங்களைக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் நோக்கில் “தமிழ்த் தேசியம்” என்றால் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “

தமது பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு கிழக்கில் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை தமக்கு இருக்கிறது என்ற எமது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையே ” தமிழ் தேசியம் “. இந்த அடிப்படையிலேயே இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வினை நாம் கோருகிறோம். என்று அவர் பதில் அளித்தார்.