செய்திகள்

வடக்கு முதல்வரை புறக்கணித்து செயற்படுவது கவலை தருகிறது: சிவசக்தி ஆனந்தன்

அதிகப்படியான தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு முதல்வரை புறக்கணித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவது கவலையளிப்பதாகவும் இது கட்சிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தப்பார்ப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவில் நேற்று (28.3) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு கல்விப் பிரச்சனைகள் தொடர்பாக நிறையவே தெரியும். வன்னி மாவட்டத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் கல்வி தொடர்பான பல பிரச்சனைகள் இருக்கின்றது. இவை தொடர்பாக கலந்துரையாடி தீர்வுகளை எட்டுவதற்கு கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் பௌதீக வளப்பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை, அதிபர் பிரச்சனை என நிறையவே பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றுக்கு நாம் ஒரு தீர்வு காணவேண்டும். அதேநேரம் நாங்களும் அமைச்சர் அவர்களும் விரைவாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை சந்திக்க இருக்கின்றோம். எனவே இருக்கக் கூடிய குறுகிய காலத்திற்குள்ளே இவற்றை தீர்க்க கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

கடந்த காலத்தில் வன்னி பாடசாலைகளில் பலர் தொண்டர் ஆசிரியர்களாக கற்பித்துள்ளார்கள். அவர்களது பிரச்சனை பாரிய பிரச்சனை. 400க்கு மேற்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களும் 177க்கு மேற்பட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த கால அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டவர்கள். இவர்கள் இருக்கும் போதே வேறு பலர் நியமனங்களை பெற்றுள்ளார்கள். எனவே இவர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டும். தற்போது கட்சி பேதமில்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயற்பட முடிகிறது. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு செய்ய முடியவில்லை. தமிழ் மக்கள் எல்லோரும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த மாற்றம் நிரந்தரமான ஒரு மாற்றமாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை தரவேண்டும்.

வடக்கிற்கு விஜயம் செய்கின்ற பிரதம மந்திரி, அமைச்சர்கள், ஜனாதிபதி ஆகியோர் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டும். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரும் மாற்றத்திற்காக வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு கவலை என்னவென்றால் வடக்கிற்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கின் முதலமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. தேசிய அரசாங்கம் என்ற வகையில் இதற்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

நாம் இணைந்து செயலாற்றியே அபிவிருத்தி உள்ளிட்ட பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. அண்மையில் வடக்கிற்கு வந்த பிரதமர் முதலமைச்சருக்கு முறையான அழைப்புக்களை வழங்கவில்லை. இதேபோன்று முல்லைத்தீவுக்கும் பிரதமர் வருகை தரவுள்ளார். அங்கு நாம் தர்மசங்கடத்திற்குள்ளான நிலையில் தான் அங்கு செல்லப் போகின்றோம். வடக்கின் முதலமைச்சர், அதிகப்படியான தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரை புறக்கணித்து வடக்கில் நடவடிக்கைகளையும் முக்கிய நிகழ்வுகளையும் மேற்கொள்வது கவலை தருகிறது. இது கட்சிக்குள்ளும் குழப்தை ஏற்படுத்துகிறது. எனவே இதனை நாம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனவும் தெரிவித்தார்.