செய்திகள்

வடமாகாண சபையின் ‘இனப்படுகொலை’ தீர்மானம்: நிதானமாக ஆராயும் இந்தியா

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே எனவும், இதனை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்குள்ளாக்க வேண்டும் எனவும் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளிவிவகார அமைச்சு கவனமாக  ஆராய்ந்துவருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையைக் கோருவது தற்போதுள்ள நிலைமைகளை மோசமடையச் செய்வதாக அமையும் என புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளை இது எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதையிட்டு உடனடியாக எதனையும் சொல்லமுடியாதிருப்பதாகவும் தெரிவித்த அவர், மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை இந்தத் தீர்மானம் பாதிக்குமா என்பதையிட்டு தாம் ஆராய்ந்துவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படுவதை இந்தியா தொடர்ந்தும் எதிர்த்தே வந்திருக்கின்றது. அத்துடன், அடுத்த வாரம் புதுடில்லி செல்லவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இந்தியப் பிரதமர் மோடி முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ள நிலையில் வடமாகாண சபையின் தீர்மானம் இரு தரப்புக்கும் சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.