செய்திகள்

வடமாகாண மக்கள் பதில்காண வேண்டிய கேள்வி: வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

வடமாகாண மக்களுக்குக் கூடிய நன்மைகளைக் கொண்டு வரக் கூடியது வேளாண்மை, மீன்பிடித்தல், சிறு கைத்தொழில்கள்சார் பாரம்பரிய வாழ்க்கைமுறையா அல்லது தொழிற்துறைசார் பாரிய தொழிற்பேட்டைகள் சார் வாழ்க்கை முறையா என்ற கேள்விக்கு மக்கள் விடைகாண முயல வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

வடமாகாண விவசாய அமைச்சு, நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரைணையின் பேரில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தில் இன்று புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்ட அமுலாக்கம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“பல வேலைப் பழுக்களின் மத்தியிலும் இன்று உங்களுடன் இணைந்திருந்து இந்தப் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்ட அமுலாக்க நிகழ்வில் பங்கு பற்றுகின்றேன் என்றால் அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று எம் கண் முன்னாலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு எம் மக்கள் நலனுக்காக இன்று எம்மால் நடைமுறைப்படுத்தப்பட முடிந்துள்ளது என்பது. அடுத்து வேளாண்மைக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் நாம் கொடுத்துவரும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துமுகமாக நான் விரைந்தோடி வந்துள்ளேன். உங்கள் பிரதேசங்கள் மேட்டு நிலமாகக் காணப்படுவதால் பள்ள நிலத்தில் ஓடும் நீரை மேட்டு நிலத்திற்கு இட்டுச் செல்வது கடினமாக இருந்தது. இதனால்த்தான் 2001ம் ஆண்டில் இங்கு மக்கள் நலம் காத்தவர்களால் புழுதியாறு மறித்து அணைகட்டப்பட்டு புழுதியாற்றுக்குளம் உருவாக்கப்பட்டது. அக்குளத்தில் இருந்து நீரை ஏற்றி மேட்டுப் பகுதிகளுக்கு வழங்கவே இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 100 ஏக்கர் நிலங்களைப் பயிர் செய்வதற்கு நீரப்பாசன வசதிகள் அமைத்துக் கொடுப்பதற்காக சுமார் 32 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்று இங்குள்ள விவசாயிகளுக்கு நாங்கள் சிறுதானிய விதைகளும் உங்கள் வேண்டுதலின் பேரில் காடு வெட்டிப் பயிர் செய்யப் போதுமான கத்திகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்று நீர்ப்பாசனம் என்பது நீரை அதன் வழி போகவிட்டு அதன் உதவியை நாடாது நீரை மேலெழச் செய்து மேட்டு நிலங்களில் அதன் பயனைப் பெறுவதாகும். ஆகவே இரண்டு முக்கிய காரியங்களை இதன் மூலம் செயற்படுத்த வேண்டியுள்ளது. ஒன்று நீரை மேலெழச் செய்வது. அடுத்தது மேலெழுந்த நீரை விவசாயிகளின் பயிர் நிலங்களுக்கு இட்டுச் செல்லல். நீரை மேலெழச் செய்வது விஞ்ஞான ரீதியாக இலகுவாக இருந்தாலும் அதனைச் சேகரித்து மேட்டு நிலங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் சற்றுச் சிரமமானது என்று கருதுகின்றேன். நீரை ஆகக் கூடிய ஒரு உயரத்திற்கு எடுத்துச் சென்றால்த்தான் அதனை நிலத்தின் சாய்வுக்கு ஏற்றவாறு பாயச் செய்யலாம். எமது எந்திரிமார் இது பற்றி கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிகின்றேன். நீரை மேலெழச் செய்வதில் இருக்கும் பிரச்சனை அதற்கான சக்தியை உண்டு பண்ணுவதாகும். அதனையும் எமது திணைக்களம் ஆர அமரச் சிந்தித்து நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

வேளாண்மையும் மீன்பிடித்தலும் எம்மால் ஊக்குவிக்கப்பட வேண்டிய இரு பெரும் தொழில்கள் என்று ஏற்கனவே கூறினேன். எமது வடமாகாண நில அமைப்பை, நீர் அமைப்பை, கலாசார விழுமியங்களை ஒட்டியே நாம் எமது பொருளாதார விருத்தியில் ஈடுபட வேண்டும்.

ஆனால்பாரிய தொழிற் பேட்டைகளை  உண்டுபண்ண வேண்டும். மக்களுக்குத் தொழில் பேட்டை வேலைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பொருளாதார விருத்திக் கொள்கை என்ற பெயரில் சிலர் கூறி வருகின்றார்கள். தொழிற் பேட்டைகளை உருவாக்குதல், பாரிய கருவிப் பொறிகளைப் பெற்றுக் கொடுத்தல், மக்களுக்கு தொழிற்சாலைகளில் வேலைகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்றவை தொழிற்துறை விருத்தியின் ஒரு அம்சமாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு வாழ்க்கை முறைக்குள் நாங்கள் சிறைப்படுத்தப்பட வேண்டுமா? கொள்கை ரீதியாக எங்கள் வடமாகாண மக்கள் எதனை விரும்புகின்றார்கள் என்பதுபற்றி எமது மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு கால கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துள்ளோம். தொழிற்துறையானது பாரிய பொருளாதார விருத்திகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை சுற்றுச் சூழல் மாசடைவுகளையும், மக்கள் மிக அடர்த்தியாகக் குறிப்பிட்ட இடங்களில் வாழ வழிவகுத்துள்ளதையும், தொழிலாளர் முதலாளித்துவப் பிரச்சனைகளையும் வேறு பல சிக்கல்களையும் உண்டு பண்ணி உள்ளதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களுள் சிலர் அப்பேர்ப்பட்ட ஒரு மன அலைவுதரும் நெருக்க வாழ்க்கைக்குப் பதிலாக வடமாகாண மக்கள் வேளாண்மையையும் மீன்பிடித் தொழில்களையும் மையமாக வைத்து பாரம்பரியமாக நாம் வாழ்ந்து வந்துள்ள வாழ்க்கை முறையை ஒட்டி ஆனால் கூடிய ஒரு தொழிற் திறனுடன், தகைமையுடன், பொருளாதார விருத்தியை மனதில் வைத்து முன்னேற வழிவகுக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். வேளாண்மைச் சமுதாயம் என்பது வேளாண்மைப் பயிர்களை வளர்த்தலும் கால் நடைகளை வளர்த்தலும் அதற்குரிய வேளாண்மை நிலங்களைப் பேணிப்பாதுகாத்தலும் என்ற முறையில் விவசாயத்திற்கு முதலிடம் கொடுத்து சமுதாயத்தை முன்னேற்றும் ஒரு வழிமுறையாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்தே இப்பேர்ப்பட்ட ஒரு கலாச்சாரம் படிப்படியாக உலகம் வாழ் மக்களிடையே பரவி விரவி பேணப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது. மனிதன் எப்பொழுது வேட்டை வாழ்க்கையில் இருந்து பிரிந்து நிலத்தோடு ஒன்றி வாழ எத்தனித்தானோ அப்பொழுதிருந்தே வேளாண்மைக் கலாச்சாரம் வளரத் தொடங்கி விட்டது.  தொழில்சார் பொருளாதார விருத்தி தொழிற் புரட்சிக் காலங்களில் இருந்துதான் உக்கிரம் பெற்று வந்துள்ளது.

எமது கலாச்சாரப் பண்புகளுக்கும் பாரம்பரியங்களுக்கும் ஏற்ற வாழ்க்கைமுறையாக வேளாண்மை, மீன்பிடித் தொழில், சிறிய கைத்தொழில்கள் போன்றவற்றை மையமாக வைத்து வளரும் ஒரு வாழ்க்கைமுறையையே நான் ஆதரிக்கின்றேன். வெளிநாடுகளில் இருந்து பாரிய பணத்தைக் கொண்டு வந்து முதலீடு செய்து பெரிய பொறிமுறைகளை, தொழிற்சாலைகளை உருவாக்கி, பொருட்களை உண்டாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி அதிக இலாபம் சேர்க்கலாம் என்பது ஒரு கருத்து. எமது பாரம்பரிய வேளாண்மை விழுமியங்களுக்கும் மீன்பிடித்துறை விழுமியங்களுக்கும் இடம் கொடுத்து மக்கள் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அங்கேயே அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து ஆனால் சிறிய சிறிய கைத்தொழில்களில் ஈடுபட்டு வேளாண்மையைப் பாதுகாக்கும் அதே நேரம், மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் அதே நேரம், சிறிய கைத்தொழில்கள் பலவற்றில் ஈடுபட முனைவது மற்றொரு வழிமுறை. சில வேளைகளில் கைத்தொழில்களை விருத்தி செய்ய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அவை சிறியனவாக இருப்பன. மக்களை ஒட்டு மொத்தமாகப் பாரிய தொழிற்சாலைகளை நோக்கிப் பயணிக்க ஊக்குவிப்பனவாக அவை அமையா.

ஆகவே இன்றைய தினம் இந்த புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் இந்த வேளையில் நாங்கள் யாவரும் வடமாகாண மக்கள் எப்பேர்ப்பட்ட ஒரு பொருளாதார விருத்தியில் ஈடுபட ஆசைப்படுகின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடைகாண புகுவது நன்மை பயக்கும் என்று நான் நம்புகின்றேன். இதுவரை காலமும் அரசாங்கங்கள் தாம் எதனைத் தம் மக்களுக்கு நன்மை பயப்பன என்று நினைத்தனவோ அதனை எப்படியாவது நடைமுறைப்படுத்துவோம் என்ற வகையில்த்தான் நடந்து வந்துள்ளன. மக்களின் குரலைக் கேட்க அவர்களுக்கு விருப்பும் இல்லை, நேரமும் இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கை முறையை, அவர்களின் எதிர்பார்ப்புக்களை, அவர்களின் ஏக்கங்களைத் தீர்க்கும் வழிமுறைகளை மக்களே பேசித் தீர்த்து ஒரு முடிவுக்குவர நாம் உதவ வேண்டும். அதுவே நிர்வகிக்கும் நாங்கள், ஆட்சிசெய்யும் நாங்கள் ஜனநாயக முறையில் ஈடுபடவேண்டிய வழிமுறை.

அண்மையில் வவுனியாவில் எங்கள் சார்பில் மக்கள் கருத்தறியச் சென்ற சில அலுவலர்களிடம் ஒரு பெரியவர் கூறினாராம் “எனக்கு வயது 70. இதுவரை காலமும் எம்மைக் கேட்காமலேயேதான் எம் சம்பந்தப்பட்ட தீர்மானங்களை ஆட்சி செய்தோர் எடுத்து வந்தார்கள். முதல் முறையாக வந்து “உங்கள் கருத்தென்ன?” என்று நீங்கள் கேட்கின்றீர்கள். சந்தோ~ம்” என்றாராம். எங்கள் வாழ்க்கை முறையை நாங்களேதான் தீர்மானிக்க வேண்டும். உதாரணத்திற்கு இரணைமடுத் திட்டத்தை எடுத்துக் கொண்டால் அரசாங்கமும் அலுவலர்களும் தமக்கு என்ன நலன்கள் கிடைப்பன என்ற அடிப்படையிலேயே, வடமாகாண சபை தேர்ந்தெடுக்கப்படும் வரையில், முடிவுகள் எடுத்து வந்தனர். நாம் வந்த பிறகுங் கூட அரசாங்கமும் அலுவலர்களும் நினைத்ததே சரி என்ற விதத்தில் என் போன்றவர்களுக்கு மூளைச் சலவை செய்து வைக்கவும் பார்த்தார்கள். ஆனால் படிப்படியாக எல்லோர் கருத்தையும் கேட்ட பின்னரே நாங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி அலுவலர்களைச் சந்தித்து எமது சந்தேகங்கள், சிக்கல்கள், சறுக்கல்களை எடுத்துரைத்த போது எமது கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்க அவர்கள் முன்வந்தார்கள். அலுவலர்கள், அரசாங்கங்கள் தமக்கேற்படும் நன்மைகளைப் பற்றிக் கவலைப்படாமல் நாளடைவில் எம் மக்களுக்கு என்ன நன்மை தீமைகள் ஏற்படுவன என்பதை முன்வைத்தே நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

அந்த அடிப்படையில்த்தான் இன்று இந்த சர்ச்சையை நான் கிளப்பியுள்ளேன். வடமாகாண மக்களுக்குக் கூடிய நன்மைகளைக் கொண்டு வரக் கூடியது வேளாண்மை, மீன்பிடித்தல், சிறு கைத்தொழில்கள்சார் பாரம்பரிய வாழ்க்கைமுறையா அல்லது தொழிற்துறைசார் பாரிய தொழிற்பேட்டைகள் சார் வாழ்க்கை முறையா என்ற கேள்விக்கு மக்கள் விடைகாண முயல வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் பாரம்பரிய வாழ்க்கை முறைகளில் பற்றுறுதி கொண்டவன் நான் என்பதைக் கூறி வைக்கின்றேன். தொழிற்பேட்டைகளும் கோடிக்கணக்கான வெளியார் முதலீடுகளும் எமது அமைதியான பாரம்பரிய வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிவிடும் என்பதே எனது கருத்து. மக்கள் கலாச்சாரம் பறிபோய்விடும் என்பதே எனது தாழ்மையான கூர் நோக்கு. வெளியார்கள் பல்லாயிரம் கோடி கொண்டு வந்து இங்கு முதலீடு செய்யப் போகின்றோம் என்று கூறும்போது கோடிகளுக்கு அடிமையாகாது எமது வாழ்க்கைக்கு உகந்ததை அவர்கள் கூறுகின்றார்களா, எமது சுற்றுச் சூழலை அவர்கள் தொழில் எவ்வாறு பாதிக்கும், தொழில்களில் பெறும் இலாபம் முழுவதும் வெளியார்கள் அனுபவிக்கக் கொண்டு செல்லப்படுமா போன்ற கேள்விகளை நாம் கேட்டு விடைகாண முயல வேண்டும். இந்தப் பிரச்சனையை எமது வடமாகாண மக்களிடம் கொடுத்து அலசி ஆராய விடுமாறு எமது பத்திரிகைகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் விடுகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் இன்று தொடங்கப்பட்டிருக்கும் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் எமது வேளாண்மை வாழ்க்கை முறைக்கு நன்மைகளைத் தரப்போகும் ஒரு புரட்சிகரமான செயற்திட்டம், நிலத்தின் பள்ளத்தையும் மேட்டையும் இணைத்து எம்மக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டை உண்டு பண்ணப் போகும் ஒரு மிக நல்ல திட்டம். அதனை முறையாகப் பாவித்து எம்மக்கள் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன். அடுத்து இங்கு நான் வரும் போது எம்மக்கள் இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தால் பாரிய நன்மைகளைப் பெற்று நல்வாழ்கை வாழ்ந்து வருகின்றார்கள் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் காது குளிரக் கேட்க வேண்டும். அதற்கு இறைவன் வழி அமைப்பானாக! “