செய்திகள்

வழி தவறி வந்த 12 வயதுடைய சிறுமியை மீட்ட தோட்ட மக்கள்

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் வைத்து வழி தவறி வந்த 12 வயதுடைய சிறுமியை மீட்ட தோட்ட மக்கள், அவரை அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி பகுதியைச் சேர்ந்த ஆர்.சிறிதேவி என்ற சிறுமியே சனிக்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இன்ஜெஸ்ட்ரி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி, வெளிஓயாவில் அமைந்துள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

தாத்தாவின் வீட்டில் தன்னை துன்புறுத்துவதாகவும் அங்கு தனக்கு சிரமமான வேலைகளை வழங்குவதாகவும் அதன் காரணமாகவே தாத்தாவின் வீட்டிலிருந்து தனது வீட்டுக்குச் செல்ல வெளியேறியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தோட்ட முகாமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த சிறுமி, அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுமி அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியை தாத்தாவின் வீட்டில் விட்டமைக்கான காரணத்தை தெரிவிக்கும்படியும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சிறுமி தரம் 6இல் கல்வி கற்பதாகவும் தாய் கொழும்பில் பணிபுரிவதாகவும் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.