செய்திகள்

வாக்குகளுக்காக மக்களைப் பார்க்கும் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வெறும் வாக்குகளாகவும் விருப்பு வாக்குகளாகவும் மக்களை பார்க்கும் கலாசாரத்தை அரசியல்வாதிகள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதுளை மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்தார்.

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அங்குள்ள மக்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் மீரியாபெத்தைக்கு சென்றிருந்தார்.

மீரியாபெத்தை மண்சரிவு அழிவு ஏற்படுத்திய துயரத்தின் பின்னணியில், கடந்த காலத்தை விடவும் வடக்கு மற்றும் மலையக மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் வலுவடைந்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெறும் வாக்குகளாகவும் விருப்பு வாக்குகளாகவும் அரசியல்வாதிகள் மக்களை பார்க்கும் கலாசாரத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்சரிவு தொடர்பிலான எச்சரிக்கை பல ஆண்டுகளுக்கு முன்னரே விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன்பின்னர் வாக்கு சேகரிக்கச் சென்றிருந்த அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது மக்கள் நலனிலும் கரிசனை கொண்டிருந்தால் உயிர்ப் பலிகளை தடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அழிவு காரணமாக அவதியுறும் சொந்தங்களுக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரையும் சொந்தங்களையும் இழந்து தவிக்கும் அப்பாவி சிறுவர் சிறுமியருக்கு வடக்கு மாகாணசபை சகல வசதிகளையும் செய்துகொடுக்கவும் கல்வியைத் தொடரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் தயார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதவிகள் கோரப்பட்டால் வடக்கு மாகாணசபை முழு அளவில் உதவிகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.