செய்திகள்

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ஜனாதிபதியை சந்திக்கிறது கூட்டமைப்பு

வடகிழக்கு தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்தின் பின்னரும் தொடர்ச்சியான புறக்கணிப் புக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் குறித்த விடயங்களை முன்னிலை ப்படுத்தியதாக எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளோம். ஆட்சிமாற்றத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இது வரையில் தீர்வு இல்லை. எனவேதான் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளோம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசஜா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் நடைபெற்றிருந்தது. குறித்த கூட்டம் தொடர்பிலும், பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்த மாவை சேனாதிராஜா எம்.பி.மேலும் தெரிவிக்கையில்;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற 4 கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டத்தை காலை 10 மணி தொடக்கம் மதியம் வரையில், நடத்தியிருந்தோம். இதில் முக்கியமாக ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திலும் தேர்தல் காலத்திலும் படையினர் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களுடைய நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படும், மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் வலி. வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலத்தை படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் 563 ஏக்கர் நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் கிழக்கு மாகாணத்திலே சம்பூர் பகுதியில் 876 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் என கூறப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறிய மக்களைப் பொலிஸார் துரத்தியடிக்கின்றார்கள்.

இதேபோன்று ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டபோதும் அவ்வாறு யாரும் விடுவிக்கப்படவில்லை. மேலும் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளைஞர்கள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றிருக்கின்றார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இல்லாத நிலையில் மிகுந்த அவலங்களை அவர்கள் சந்திக்கின்றார்கள். தங்கள் வேலைவாய்ப்புக்காக ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதப் போராட்டங்களையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் இந்நிலையில் அந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்.

எனவே இவ்வாறு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமை தொடர் பாக நாங்கள் பேசியிருப்பதுடன், இந்தப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வினைக் கொடுக்கப்போகின்றார்கள்? என்பது தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும், பிரதமர் ஆகியோரை சந்திக்கத் தீர்மானித்திருக்கின்றோம். மேலும் இன்று (நேற்று) எடுத்திருக்கும் இந்தத் தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தனுக்கு அனுப்பி ஜனாதிபதியுடனான சந்திப்பை ஒழுங்கமைப்பதற்கு கோரிக்கை விடுக்கவிருக்கின்றோம்.

இதேவேளை தேர்தல் ஒன்று நடைபெற்றால் கட்சிகளுக்கிடையிலான ஆசனங்கள் பங்கீடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரி த்தல் போன்றன தொடர்பாகவும், 20 ஆம் திருத்தம் தொடர்பாகவும் நாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பது மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் ஒரு ஐக்கியத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வது போன்ற பல விடயங்கள் தொடர்பாக பேசியிருக்கின்றோம் என்றார்.