செய்திகள்

விக்னேஸ்வரனுடனான மலையக விஜயம் தொடர்பில் மனோவிடம் ரணில் ஆர்வமுடன் விசாரணை

வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பு எம்பிக்களுடன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தனித்தனியாக பதுளை மண்சரிவு பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்குள் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் பல தரப்பினர் மத்தியில் பல்வேறு மனோவுணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் இதொகாவினர் மத்தியில் ஒரு மன குழப்பம் ஏற்பட்டுள்ளது. காணி வழங்கல் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும், செந்தில் தொண்டமானுக்கும் இடையில் ஊடகங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மனோ கணேசனுடன் தொடர்பு கொண்ட ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பு ஜனநாயக மக்கள் முன்னணி இணைந்த செயற்பாடு தொடர்பில் தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்த, மலையக வீடமைப்பு அதிகாரசபை, என்ற யோசனையை, ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனிடம் வெகுவாக பாராட்டியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த “மனோ-விக்கி-கூட்டமைப்பு” மலையக கூட்டு செயற்பாடு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வாக்கு வங்கியை தனக்கு சார்பாக மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரணிலிடம் இருப்பதாக தெரியவருகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசுக்கு ஆதரவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே சிறுபான்மை வாக்கு வங்கி, தோட்ட தொழிலாளர்களின் வாக்கு என மகிந்த கணக்கு போடும் வேளையில், ரணில் இன்னொரு கணக்கு போடுகிறார் என சிறிகோத்த வட்டாரங்கள் தெரிவித்தன.