செய்திகள்

விசேட தேவையுடைய இளைஞன் அமைக்கும் கிணறுக்கு மட்டு செஞ்சிலுவை சங்கம் உதவி

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் விசேட தேவையுடைய இளைஞனால் அமைக்கப்பட்டுவரும் பொதுக்கிணறுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் நேற்று திங்கட்கிழமை உதவிகள் வழங்கப்பட்டது.

இலுப்படிச்சேனைக் கிராமத்தில் குடிநீர்ப்பிரச்சினை நிலவிவருகிறது குடிநீருக்கு மட்டுமல்லாது ஏனைய நீர்த் தேவைகளுக்காகவும் அயலிடங்களுக்கும் தூர இடங்களுக்கும் மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

இது சாதாரண மக்களுக்கே பெரும் கஸ்டமாக இருக்கையில் விஷேட தேவையுடையவர்களின் நிலைமை சொல்லிலடங்காது.

இந்த இளைஞன் இந்நிலமையிலிருந்து மீளும் எண்ணத்தோடு தான் குடியிருக்கும் காணியினுள் கிணறு ஒன்றை அமைத்துக் கொள்வதற்காக முயற்சித்து பலரின் உதவியோடு கிணறு ஒன்றினை கட்ட ஆரம்பித்துள்ள போதிலும் அதனைப் பூரணப்படுத்திக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கிவந்தார்.

தனது சிரமங்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையிடம் தெரிவத்தபோது, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராசா உள்ளிட்ட உறுப்பினர்கள், அக்கிணறைப் பூரணப்படுத்துவதற்குரிய 05 சீமெந்துப் பைகளை நேற்று திங்கட் கிழமை (09) அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கியுள்ளனர்.

இக்குறித்த விசேட தேவையுடைய கணேசமூர்த்தி றஜனிக்காந் என்பவர் அமைக்கும் இக்கிணறு பூர்த்தி செய்யப்படுமிடத்து அவருக்கு மாத்திரமின்றி அக்கிராமத்தின் ஒரு பகுதியில் காணப்படும் நீர் தேவை நிவேற்றப்படும் கணேசமூர்த்தி றஜனிக்காந் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுபோன்ற சுய முயற்சிகளை பூர்தி செய்ய முடியாமல் கஷ்ட்டப்படும் மக்கள் மத்தியிலேயே தமது மனிதாபிமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராசா கூறினார்.IMG_6142