செய்திகள்

விமானக் கடத்தலுக்கு திட்டம்! பாதுகாப்பை பலப்படுத்திய டில்லி

இந்தியாவில் விமானம் ஒன்றைக் கடத்துவதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறை செய்தியையடுத்து இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் நகருக்கு கடத்தியதுபோல, இந்திய விமானத்தை மீண்டும் கடத்தும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“விமானத்தைக் கடத்தும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானக் கடத்தலைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன.

புதுடில்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்பட முக்கிய விமான நிலையங்களில், பயணிகளிடம் நடத்தப்படும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்களும் சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பு, பொருள்கள் வைக்கும் இடத்தை முழுமையாகச் சோதனை செய்யும்படி, விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோல், இந்தியாவுக்குள் கடல் வழியாக ஊடுருவித் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் வந்த படகு, குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே மடக்கப்பட்டது. அப்போது இந்திய கடற்படையினரிடம் சிக்காமல் இருக்க அந்தப் படகில் இருந்தவர்கள், படகை வெடிக்கச் செய்தனர். இதனால், மும்பை தாக்குதல் போன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் நடத்தவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அதேசமயம், இதேபோல் மேலும் ஒரு படகில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதால், அந்தப் படகையும், அதில் வந்தவர்களையும் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் வங்காள மொழியில் பேசிய நபர், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

ஆனால், கடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானம் குறித்து எந்தத் தகவலையும் அந்த நபர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த மிரட்டல் குறித்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள், தொழில்நுட்பப் பாதுகாப்புப் படை, விமான நிலையங்களுக்கான அமைப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது தொடர்பான விசாரணையை அந்த மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். இதுகுறித்து அந்த மாநில காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

விசாரணை நடத்துவதற்கு சிறப்பு அதிரடிப் படை, துப்பறியும் துறை நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, ஏர் இந்தியா அலுவலகத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது யார் என விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், கொல்கத்தாவில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக சிவில் விமானப் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன’ என்றார்.

கொல்கத்தாவில் பாதுகாப்பு: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமானப் பயணிகளின் உடைமைகள், விமான நிலையக் கட்டடங்கள் அனைத்திலும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் கார்கள் நிறுத்துமிடத்திலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.