செய்திகள்

வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல கே.பி.யை அனுமதிக்கக்கூடாது: நீதிமன்றில் ஜே.வி.பி. மனு

பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்து அவர் இழைத்த குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்வேண்டும் என நீதிமன்றத்தைக் கோரியுள்ள ஜே.வி.பி., கே.பி. நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் கேட்டுள்ளது.

கே.பி. மீது அவர் இழைத்த குற்றங்களுக்காக வழக்கு தொடருமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தாக்கல் செய்துள்ள மனுவில், பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், இராணுவத் தளபதி, கிளிநொச்சி கட்டளைத் தளபதி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், சட்டமா அதிபர் மற்றும் குமரன் பத்மநாதன் ஆகியோரது பெயர்கள் பிரிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

குமரன் பத்மநாதன் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச நாடுகளில் இருந்து ஆயுதங்களை விநியோகித்து யுத்தத்தை நடத்திச் செல்வதற்கு துணை புரிந்ததாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத விநியோக செயற்பாட்டை நிறைவேற்றிய அவருக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடனும் தொடர்பு உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்

குமரன் பத்மநாதன் ஆயுதங்களை விநியோகித்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியதால் இலங்கை இராணுவ வீரர்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டதாகவும் விஜித்த ஹேரத் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபருக்கு எதிராக அப்போதைய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது அரச சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றை அவரிடம் ஒப்படைத்திருந்ததாகவும் எவ்வித குற்றத்தையும் இழைக்காத ஒருவராக அவர் நடத்தப்பட்டதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட்டால் தமது மனுவின் நோக்கம் நிறைவேறாமற்போகும் எனவும் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.