செய்திகள்

வைத்தியசாலைக்கு சென்று பஸிலிடம் நலம் விசாரித்த ராஜித

கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவை பார்வையிடுவதற்காக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன அந்த வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
கடந்த 20ம் திகதி மாலை 6மணியளவில் ராஜித குறித்த வைத்தியசாலைக்கு சென்று பஸிலிடம் நலம் விசாரித்ததாகவும் இதன்போது இருவரும் இரண்டு மணித்தியாளங்கள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பழைய நண்பன் என்ற அடிப்படையில் அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றதாக ராஜித தெரிவித்துள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக கடந்த ஏப்ரல் 22ம் திகதி முதல் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பஸில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ந நிலையில்  கடந்த வாரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அதனை தொடர்ந்து தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.