செய்திகள்

ஷிராணியை வெளியேற்றிய போது வாசுவின் நீதி மரணித்துவிட்டதா? சண். குகவரதன்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பலாத்காரமாக மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றிய போது அதனை நியாயப்படுத்திய வாசுதேவ நாணயக்கார பிரதம நீதியரசர் பதவியின் கௌரவத்தை குழிதோண்டிப் புதைத்த மொஹான் பீரிஸை வெளியேற்றியமை பிழையானதென ”வக்காளத்து வாங்குவது வாசுவும், ஒரு சாதாரண அரசியல்வாதியே தவிர கொள்கைவாதியல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன், அப்பாவி மக்களின் சமுர்த்திப் பணத்தை சுருட்டிய கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக வாசுவின் நிலைப்பாடு என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெள்ளவத்தை மனிங் பிளேஸிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே சண். குகவரதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, சமுர்த்தி, திவிநெகும திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பஷில் ராஜபக்ஷவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்காததால்,

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பாராளுமன்ற அரசியலமைப்பு மரபுகள் மீறப்பட்டு அவரது பக்க நியாயங்களை கூறுவதற்கு கூட போதிய சந்தர்ப்பத்தை வழங்காது அன்றைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக வெளியேற்றினார்.

அதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த மொஹான் பீரிஸிற்கு பதவியை வழங்கினார். ஆனால் சட்டபூர்வமாக நியமனத்தை வழங்கவில்லை. மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியை குழிதோண்டிப் புதைத்ததால் பல கம்பனிகளில் உரிமையாளராகவும் பங்காளராகவும் இருக்கின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியை பதவியேற்க விடாமல் சூழ்ச்சியில் ஈடுபட்டவர். தனது பதவியை பாதுகாத்துக் கொள்ள எந்தத் தில்லு முல்லையும் செய்யக் கூடியவர் என்பதை இந்நாட்டு மக்கள் மட்டுமல்ல வெளிநாடுகளும் புரிந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் சட்ட பிரகாரமே அவர் புதிய ஜனாதிபதியால் பதவி விலக்கப்பட்டுள்ளார். அதில் பாராளுமன்றத்தின் இறையாண்மையோ அரசியலமைப்போ மீறப்படவில்லை. ஆனால் தன்னை ‘சமதர்ம வாதி”  ‘கொள்கை வாதி” எனக் காட்டிக்கொள்ளும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஷிராணி பண்டார நாயக்காவின் நியாயத்தை அன்று குப்பை தொட்டியில் எறிந்து விட்டு இன்று குற்றவாளிகளுக்கு வக்காளத்து வாங்குகிறார்.

திவிநெகும, சமுர்த்தி நிதியத்திலுள்ள அப்பாவி மக்களின் பலகோடி ரூபாய்களை சுருட்டிக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார்.

அத்தோடு ராஜபக்ஸவின் குடும்பத்தினர் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோகமாக வாழ்ந்தமை கொலைகள், வெள்ளைவான் கடத்தல்கள் கிலோ கணக்கில் தங்கம் விற்றமை என ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி இதுவரையில் வாய் திறக்கவில்லை மௌனமாகவேயுள்ளார். இதன் மூலம் தானும் ஒரு சராசரி அரசியல்வாதியே தவிர கொள்கைவாதியல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வாய்பேச்சில் மட்டுமே வாசு வீரராக திகழ்ந்தாரே தவிர ‘தமிழ்’ மொழி உரிமைக்காக எதனையுமே அவர் செய்யவில்லை.

‘தமிழ் சங்கவீதி ‘ என்ற பெயர் மாற்றத்தையேனும் நிறைவேற்ற முடியாத கையாலாகாத சிங்கள கடும்போக்கு வாதிகளின் சிறைக் கைதியே வாசு என்றும் சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.