செய்திகள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிப்ரவரி 13 ஆம் தேதி

தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டில்லி சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் திங்களன்று அறிவித்துள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் இன்று இதற்கான அறிவிப்பை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தலின் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வெள்ளியன்று நடைபெறும். பின்னர் வாக்கு எண்ணும் நடவடிக்கை பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திங்களன்று நடைபெற்று, பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் தேர்தல் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியிழந்த நிலையிலேயே ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கின்றது.

ஆந்திராவில் திருப்பதி சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் நடைபெற வேண்டிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இதே குறிப்பிட்ட தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறும் என்றும், அதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி செவ்வாயன்று நடைபெற்று வரும் பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் தேர்தல் நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளதால், உடனடியாக அந்தந்த பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.