செய்திகள்

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்காக விசேட குழு நியமனம்

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் உடல் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா , கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவத்துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசேட குழுவினரின் மேற்பார்வையின் கீழ், சிறுமி ஹிஷாலியின் சடலம் எதிர்வரும் 30 ஆம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

டயகம பகுதிக்கு பொறுப்பான நீதவானின் பூரண கண்காணிப்பின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இவர்களை தவிர தொடர்புடைய விசேட நிபுணர்கள் பலரும் நாளை மறுதினம் டயகம பகுதிக்கு செல்லவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுமி உயிரிழந்த விதம், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அவ்வாறு ஏற்பட்டிருப்பின் எந்த காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்படவுள்ளது.
-(3)