ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாக கானா தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாகக் கூறி குறித்த சந்தேக நபர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த பணத்தைப் பெற்ற பின்னர், சந்தேக நபர்கள் பாராளுமன்ற உறுப்பினருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு 50 கிலோகிராம் தங்கத்தை விற்பனை செய்ய சந்தேகநபர்கள் இணங்கியதாகவும் அதன் சட்டப்பூர்வமான தன்மையைக் கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கானா தேசிய பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி சந்தேக நபர்களை கைது செய்தது.
அவர்கள் கைது செய்யப்பட்டபோது தங்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு மஞ்சள் உலோகங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



