செய்திகள்

ஹீரோவாகிய இராணுவ அதிகாரியும் சிதையும் தமிழ் தேசியமும்

நரேன்-

வன்னியில் இருந்து மாற்றலாகி சென்று மீண்டும் வன்னிக்கு வந்திருக்கும் கேணல் ரத்னபிரிய என்ற இராணுவ அதிகாரியின் பிரியாவிடை நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முகப்புத்தகங்கள், ஊடகங்கள் என்பவற்றில் அந்த விடயம் பேசுபொருளாக மாறியிருப்பதுடன் அடுத்து வரும் ஜெனீவா அமர்விலும் அது தாக்கம் செலுத்தும் அளவுக்கு சென்றிருக்கின்றது. இந்த நிலைக்கு என்ன காரணம்….?, யார் பொறுப்பு …? என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியமானதே.

யாழ் மாவட்டத்தை சூரியகதிர் இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் 1995 ஆம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகளின் கட்மைப்பு வன்னியை மையமாக கொண்டு இயங்கியது. தென்னிலங்கை அரசாங்கத்திற்கு ஈடாக அரசியல், பொருளாதாரம், நிதி, நீதி என அனைத்து துறைகளிலும் கால் பதித்து ஒரு அரசாங்கம் போன்று விடுதலைப் புலிகள் செயற்பட்டார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் பலர் வேலைவாய்ப்புக்களையும் பெற்றிருந்தார்கள். தென்னிலங்கையின் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வன்னியில் விடுதலைப் புலிகளின் உதவியுடன் அப்பிரதேச தன்மைகளுக்கு ஏற்ப பொருளாதார கட்டமைப்புக்களை மக்கள் பேணியிருந்தனர். கைத்தொழிற்சாலைகள், உள்ளூர் உற்பத்திகள், கடற்தொழில், விவசாயம் என அவை பரிணமித்து இருந்தது. ஆனால் 2009 மே 18 இற்கு பின்னர் இந்த கட்டமைப்புக்கள் நிலை குலைத்தன. விடுதலைப்புலிகளின் சொத்துக்களும், தொழில் மையங்களும் இராணுவத்தின் கட்டுக்குள் சென்றது. மக்கள் தமது உடமைகள், சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஏதும் அற்ற ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர். இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்ட மக்கள் 2010 இற்கு பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். மீள்குடியேற்றம் என்பது ஒரு நிரந்தர அல்லது அரை நிரந்தர வீட்டுடன் நிறைவுற்றது. அவர்களது பொருளாதாரம், வாழ்வாதாரம் பற்றி கவனிக்கப்படவில்லை. இதனால் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக இருந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இதில் மூன்று வகையான மக்கள் கூட்டம் உள்ளது. ஒன்று விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்கள், இரண்டாவது விடுதலைப் புலிகள் அமைப்பின் கீழ் தொழில் புரிந்து தற்போது தொழில் அற்றவர்கள், மூன்றாவது சாதாரணமாக இருந்த பொது மக்கள். இதில் முதல் இரண்டு மக்கள் கூட்டத்தினரதும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டிய அரசாங்கமும், அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிகளும், மாகாண சபையும் அதை செய்ய தவறியது. அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக செய்ய வேண்டிய வேலைக்கு கூட தமிழ் தலைமைகள் பாராளுமன்றத்தின் ஊடாக போதிய அழுத்தம் கொடுக்க வில்லை. இந்த நிலையில் தான் இராணுவத்தைச் சேர்ந்த கேணல் ரத்னபிரிய ஹீரோவாகியுள்ளார்.

rad5இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்களையும், அவர்களது காணிகளையும் பராமரிக்க இராணுவத்திற்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். இராணுவத்தின் புலனாய்வு கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த தமிழ் மக்களுடான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டியும் இருந்தது. போர்க்குற்றச் சாட்டில் இருந்து இராணுவத்தை விடுவிக்க அந்த இராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய தேவையும் படைத்தரப்புக்கு இருந்தது. இதனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட வன்னி மக்களை பொருளாதார ரீதியாக இராணுவத்தில் தங்கியிருக்கச் செய்வதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் மேற்சொன்ன இலக்குகளை அடைய முடியும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டத்தே சிவில் பாதுகப்பு திணைக்களம். அதன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கட்டளை தளபதியே அண்மையில் மக்களால் போற்றப்பட்ட கேணல் ரத்னபிரிய. ஆக, அரசியல், பொருளாதார, புலனாய்வு நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பே இந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம். அதற்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை என கூறினாலும் அது முழுக்க முழுக்க இராணுவ கட்டமைப்பின் கீழ், அதன் நிகழ்ச்சி நிரலில் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்தே செயற்படுகின்றது. இந்த திணைக்களத்தின் கீழ் சுமார் 3500 பேர் வரையிலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிய முடிகிறது. ஆரம்பத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைக்கு இணைந்து கொள்ள பலரும் விரும்பம் காட்டாத போதும், காலப்போக்கில் மக்களின் வறுமையும், முன்னாள் போராளிகளின் பாதுகாப்பும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கவர்ச்சிகரமான சம்பளமும், அரசியல் தலைமைகளின் வங்குரோத்து நிலையும் அந்த நிலையை தலைகீழாக மாற்றியது.

புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளிகள், விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் வேலை செய்தவர்கள் ஆகியோரை அதிகமாக உள்வாங்கிய சிவில் பாதுகாப்பு திணைக்களம் அவர்களுடன் நெருக்கத்தை அதிகரித்து அவர்களது வாழ்வாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு என்பவற்றை தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது. இத் திணைக்களத்தில் வேலை செய்பவர்களுக்கு 30,000 ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இவற்றுடன் கவர்ச்சிகரமான சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. பண்ணையில் வேலை செய்வோர் தொடக்கம் முன்பள்ளி ஆசிரியர்கள் வரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலை செய்வதாக பதிவில் உள்ள ஒருவர் வேறு வேலை செய்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. அவர் தனது சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சம்பளத்தை முழுமையாக பெற்று அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை மீளச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய இரட்டை சம்பளம் பெறும் வாய்ப்பையும் இந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் செய்திருந்தது. அந்த திணைக்களம் ஊடாக அதனை கேணல் ரத்னபிரிய செய்தார். அத்தகைய சலுகைகளை இழப்பதற்கு யார் தான் விரும்புவர்….?

rad4அவர் அதனை தனது சொந்த நிதியில் இருந்து செய்யவில்லை. கருணை அடிப்படையிலும் செய்யவில்லை. இராணுவ, பொருளாதார, அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பாதுகாப்பு அமமைச்சின் நிகழ்சி நிரலை நெறிப்படுத்தியிருக்கின்றார். மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைகளை கூட்டமைப்பின் ஆதரவுடன் அதிக நிதியை பாதுகாப்பு செலவீனத்திற்கு அதாவது பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கி அதன் ஊடாக இராணுவம் இந்த வேலைகளை செய்கின்றது. இதேபோல் வடபகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் இராணுவம் முன்னெடுத்து வருகின்றது. இந்த செயற்பாடுகளுக்கு தேவையான நிதிகளை பட்ஜெட் ஊடாக அரசாங்கம் ஒதுக்கும் போது கை உயர்த்தி விட்டு இன்று இராணுவ அதிகாரியை மக்கள் பல்லக்கில் ஏற்றிவிட்டார்கள் என அங்கலாய்ந்து நிற்கிறார்கள் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். இந்த நிலைக்கு அவர்களும் காரணம் என்பதை மறுத்து விட முடியாது.

தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தீர்வு என்பது ஒரு நீண்ட விடயம். ஆனால் உடனடித் தேவைகள் உரிய நேரத்தில் கவனிக்கப்பட வேண்டியவை. அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காத அதேவேளை, தாமும் அதை செய்ய தமிழ் தலைமைகள் முன்வரவில்லை. இந்தநிலை பொருளாதார ரீதியாக இராணுவத்தில் தங்கியிருக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறது. இதனால் இராணுவ அதிகாரியை தூக்கி கொண்டாட வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடமாரட்சி பகுதி கடற்தொழிலாளர் மேற்கொண்ட போராட்டத்தின் போது அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா போராட்ட இடத்தில் இருந்து விரட்டப்பட்டிருந்தார். மறுபுறம் புலிகளின் கோட்டையாக விளங்கிய வன்னியில் இராணுவத் தளபதியை கட்டியணைத்து மக்கள் தோளில் சுமந்து சென்றிருக்கின்றார்கள். இது தமிழ் தேசிய அரசியல் சரியான வழிவரைபடம் இன்றி பயணிப்பதையே வெளிப்படுத்துகிறது. அடுத்து வரும் ஜெனீவா அமர்வில் ரத்னபிரிய விவகாரம் பேசுபொருளாக மாறப்போகிறது. மக்கள் இராணுவத்தை விரும்புகிறார்கள். மக்களுடன் இணைந்து இராணுவம் செயற்படுகிறது. அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காக இராணுவம் மீது பழி போடுகிறார்கள் என்ற செய்தியை தென்னிலங்கை கூறப்போகிறது. இதற்கு தமிழ் தலைவர்களின் செயற்பாடும் துணைபோயுள்ளது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதை தமிழ் தலைமைகள் உணரவேண்டும்.

rad3இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் புரிந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு இராணுவத்தை அதே இனத்தைச் சேர்ந்த மக்கள் மாலை போட்டு தோளில் சுமக்கும் நிலை உருவாகியிருக்கிறது. வன்னி முன்பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் புலிமாமா என அழைத்த காலம் போய் தற்போது ஆமி மாமா, ஆமி மாமா என அழைக்கும் சத்தம் எழுந்திருக்கின்றது. மறைமுக இராணுவ நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் தேசியம் சிதைந்து போய் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசியத்தின் இருப்பும், தமிழ் இனத்தின் இருப்பும், தனித்துவமும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தலைமைகள் புரிந்து கொள்ளாத வரை ணேல் ரத்னபிரிய போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கேணல்கள் மக்களின் தோள்களில் சவாரி செய்யும் காலம் தொலைவில் இல்லை. இதற்கு இனிவரும் காலங்களே பதில் சொல்லும்.

N5