செய்திகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள்: தமிழரசுக் கட்சியை சந்திக்க ஜனாதிபதி இணக்கம்!

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த வாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக ஜனாதிபதி தமக்கு நேரத்தை வழங்கவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றுவர் எனத் தெரிகின்றது.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றிய பேச்சுக்கள் என்பதால் அது குறித்து மட்டுமே இந்த உரையாடலில் கலந்துரையாடப்படும் என்றும், தீர்வுக்காக முன்னகரும் அதேநேரம், அதற்கிடையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், அதுவரையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் ஆகியவை குறித்தும் தமிழரசுக் கட்சி இந்தச் சந்திப்பில் வலியுறுத்தும் எனத் தெரிகின்றது.

இதேவேளை சந்திப்புக்காக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து தாம் வரவு செலவுத்திட்டத்தில் நடுவகிப்பதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

நடுநிலை வகிப்பதன் மூலம் ஜனாதிபதி மீதான எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி, தீர்வுக்கான நல்லெண்ணத்தை ஒரு செய்தியாக விடுக்கின்றோம் என்று நேற்று சாணக்கியன் எம்.பி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.