செய்திகள்

இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் – இரண்டாம் பாகம் ?

யதீந்திரா

இலங்கையின் அரசியல் கடிகாரம் மீளவும் பழைய காலத்தை நோக்கித் திரும்பக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான மனித உரிமைகள் விவகாரம் மீளவும் கூட்டான விவாதங்களை ஏற்படுத்தலாம். இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. அதாவது, மீளவும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் ராஜபக்சக்களின் அரசாங்கமானது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துப் போகும் முடிவை நிராகரித்திருக்கின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் வார்தையில் கூறுவதனால், முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை இறந்துவிட்டது. அதனை இனி உயிர்ப்பிக்க முடியாது. உண்மையிலேயே அந்தப் பிரேரணை இறந்துதான்விட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கையின் மீது எவ்வாறானதொரு பிரேரணை கொண்டுவரப்படலாம் என்னும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மீது, கரிசனைகொண்டிருக்கும் மேற்குலக நாடுகள் என்ன செய்யும் – என்ன செய்யக் கூடுமென்னும் கேள்விகள் பரவலாக எழுப்பப்டுகின்றன. இலங்கையின் மீது புதிய பிரேணையொன்றை கொண்டுவர வேண்டுமென்பதே தமிழர் தரப்புக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. மீளவும் ரோல் ஓவர் முறையில் 30ஃ1 தீர்மானத்தை புதிது போன்று கொண்டுவருவதை பெரும்பாலான தமிழர் அமைப்புக்கள் விரும்பவில்லை. அதியுச்சளவான தீர்மானம் ஒன்றை நாம் முன்வைப்போம், அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாடுகள் மேற்கொள்ளட்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனாலும் இதுவரையில் இதில் ஒருமித்த நிலைப்பாடு தமிழ் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் ஏற்படவில்லை. இது தமிழர் பக்கத்திலுள்ள பலவீனமாகும். ஆனால் அமெரிக்கா இதில் தலையீடு செய்வதென்று தீர்மானித்துவிட்டால், அதன் பின்னர் தமிழர் தரப்பின் விருப்பு வெறுப்புக்கள் இங்கு விடயமல்ல. ஒரு வேளை தமிழர் தரப்பிலுள்ளவர்கள் புதிய பிரேரணை தேவையில்லையென்று கூறினால் கூட, புதிய பிரேரணையேயொன்றையே அமெரிக்கா முன்தள்ளும்.

சர்வதேச அரசியல் பின்புலத்தில் நோக்கினால் மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகள் முன்னரைவிடவும் அதிகரிப்பதற்கான புறநிலைமைகள் சற்று பிரகாசமாகவே இருக்கின்றன. அமெரிக்காவில் மீண்டும் ஜனநாயக கட்சியின் தலைமையிலான நிர்வாகம் விடயங்களை கையாளவுள்ள நிலையில், புதிய நிர்வாகம் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் கூடுதல் கரிசனையை நிச்சயம் வெளிப்படுத்தும். இதன் பொருள், முன்னைய குடியரசு கட்சியின் நிர்வாகம் மனித உரிமைகள் விடயத்தில் கரிசனையை காண்பிக்கவில்லை என்பதல்ல. அமெரிக்காவின் முன்னைய நிர்வாகம்தான், இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திரசில்வாவின் மீது பயணத்தடையை விதித்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால் குடியரசு கட்சியின் கௌ;கை நிலைப்பாடு காரணமாக, மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருந்தது.

2006இல் மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டபோது, அப்போதிருந்த புஸ்நிர்வாகம் பேரவையை நிராகரித்திருந்தது. இதற்கு இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களே காரணமாகும். உலகளாவிய அமெரிக்க அணுகுமுறைகளுக்கும் மனித உரிமைகள் பேரவையிலிருந்து ரம் நிர்வாகம் வெளியேறியமைக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் அமெரிக்க வெளியேற்றம் மனித உரிமைகள் பேரவையை பலவீனப்படுத்தியிருந்தது. உண்மையில் 2009இல் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியினர் நிர்வாகத்தை பொறுப்பேற்ற பின்னர்தான், ஜ.நா – மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பயணிக்கும் கொள்கை நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இந்த பின்புலத்தில்தான் 2012இல் இலங்கையின் மீதான அமெரிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்தத் தீர்மானத்துடன் அப்போதிருந்த ராஜபக்ச அரசாங்கம் ஒத்துப்போகவில்லை. இதன் விளைவே 2013. 2014 பிரேரணைகள்.

மீளவும் ராஜபக்சக்கள் அதிகாரத்கை கைப்பற்றியிருக்கின்ற நிலையிலும், மீளவும் மேற்குலகுடன் ஒத்துப் போகமறுக்கும் நிலையிலும்தான் – மீளவும் மனித உரிமைகள் விவகாரம் சூடுபிடிக்கவுள்ளது. மனித உரிமைகள் விடயத்தை புவிசார் அரசியல் நோக்கில் புரிந்துகொள்ளும் பார்வை தமிழ்ச் சூழலில் மிகவும் குறைவு. உண்மையில் இது தொடர்பில் மிகவும் மேலோட்டமான பார்வைகளே தமிழ்ச் சூழலை ஆக்கிரமித்திருக்கின்றன. இதன் காரணமாகவே, தமிழ்த்தேசியவாத கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொள்கின்றனர். 2012இல் அமெரிக்கா ஒரு பிரேரணையை உந்தித்தள்ளியதை அப்போதிருந்த சர்வதேச அரசியல் சூழலோடு இணைத்தே புரிந்துகொள்ள வேண்டும். 2011இல், அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கட்டுரை ஒன்றில், ஆசியா தங்களுடைய தலைமைத்துவத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தியிருந்தது. ஒரு வேளை அமெரிக்கா அப்போது இந்த விடயத்தில் தலையீடு செய்யாதிருந்திருந்தால், மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையின் மீதான பிரேரணையை கொண்டுவந்திருக்க முடியாது போயிருக்கலாம். இப்போதும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது. எதிர்வரும் மார்ச்சில் இலங்கையின் மீது புதிய பிரேரணையொன்றை கொண்டுவர வேண்டுமாயின், நிச்சயமாக அமெரிக்காவின் அனுசரனை கட்டாயம் தேவை. பிறிதொரு நாட்டின் மூலம் புதிய பிரேரணையொன்றை கொண்;டுவருவதாயினும் அமெரிக்காவின் ஆதரவின்றி அது சாத்தியமான ஒன்றல்ல. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் மீளவும் ஜ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. ஏற்கனவே ஜ.நாவின் செயலாளர் நாயகத்துடன் பைடன் நெருங்கிச் செயற்படுவது தொடர்பில் உரையாடியிருக்கின்றார்.

UNHRC Dinesh

இந்த விடயங்களை தொகுத்து நோக்குவோமாயின், ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, பைடன் நிhவாகத்தில் இலங்கை மீதான அமெரிக்க அழுத்தங்களின் இரண்டாம் பாகம் ஆரம்பமாகவுள்ளது. இந்த இரண்டாம் பாகம் முன்னரைவிடவும் வித்தியாசமானதாக அமையலாம். ஏனெனில் முன்னர் அமெரிக்கா – ஜநா மனித உரிமைகள் பேரவை என்னும் நிலையில் காணப்பட்ட மனித உரிமைசார் அழுத்தங்களானது, தற்போது ஜரோப்பிய ஒன்றியம் என்னும் நிலையிலும் விரிவுபடலாம். ஏனெனில் ஜரோப்பிய ஒன்றியம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடைவிதிக்கும் ஒரு புதிய செயலணியையும் உருவாக்கியிருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை மேற்குலகுடன் முரண்பட்டுச் செல்லுகின்ற போது, மனித உரிமைகள் சார் அழுத்தங்கள் அதிகரிக்கவே வாய்ப்புண்டு. அது பொருளாதார தடையை நோக்கிச் செல்லுமா அல்லது இல்லையா என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது. ஆனால் ஒரு பொருளாதார தடையை அரசாங்கம் அனுமானிக்கின்றதா என்னும் சந்தேகமும் எழுகின்றது. அண்மைக்காலமாக புதிய அரசாங்கம் உள்நாட்டில் தொழில்துறைகளை உருவாக்க வேண்டுமென்று கூறிவருகின்றது. இது ஒரு வகை அச்சத்தின் வெளிப்பாடா அல்லது பொருளாதார விருத்தி தொடர்பான அக்கறையா?

நிலைமைகளை உற்றுநோக்கினால் 2012இல் அமெரிக்க பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, இலங்கையின் உள்ளக நிலைமைகள் எவ்வாறிருந்தனவோ, அவ்வாறானதொரு நிலைமையே தற்போது காணப்படுகின்றது. கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் மேற்குலகுடன் ஒத்துழைக்க மறுக்கும் போக்கே காணப்படுகின்றது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச காலத்தில் மனித உரிமைகள்சார் அழுத்தங்கள் அதிகரித்தது போன்றதொரு புறச்சூழல் மீளவும் காணப்படுகின்றது. மீளவும், கடிகாரம் பழைய காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

மேற்குலகின் மனித உரிமைகள் சார் அழுத்தங்களுக்கும் ஆசியாவில் ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைந்துவரும் சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்கும் அமெரிக்க மூலோபாயத்திற்குமிடையில் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. ஏனெனில் சீனா நடைமுறையில் இருக்கும் உலக ஒழுங்கிற்கு (சுரடநள டியளநன ழசனநச) சவால் விடும் ஒரு மேலாதிக்க சக்தியாக மேலெழுந்துவருகின்றது.

சீனாவின் செல்வாக்கு எந்த நாடுகளில் அதிகரிக்கின்றதோ, அங்கெல்லாம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் தொடர்பான கரிசனை குறைவடைகின்றது. இந்த நிலைமை படிப்படியாக அதிகரிக்கின்ற போது, தற்போதிருக்கின்ற உலக ஒழுங்கிற்கு மாற்றான புதியதொரு உலக ஒழுங்கு சீனாவின் தலைமையில் உருவாகும். இந்த பின்புலத்தில்தான் இலங்கையின் மீதான மனித உரிமைகள் சார் அழுத்தங்களை உற்றுநோக்க வேண்டும்.

தமிழர்களின் நலன்களுக்காக இங்கு எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் நடைபெறும் விடயங்களை தமிழர்களின் நலன்களிலிருந்து பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலில்லை. அந்தப் பொறுப்பு தமிழ் தலைமைகளுடையதாகும். இது தொடர்பில் தமிழ் தலைமைகள் மீது அழத்தங்களை பிரயோகிக்க வேண்டியது புத்திஜீவிகள், சிவில் சமூகத் தரப்புக்களின் பொறுப்பாகும்.

உலக அரசியல் போக்கை துல்லியமாக விளங்கிக்கொள்வதன் ஊடாகவே, இந்த விடயங்களை தமிழர் நலனிலிருந்து அணுக முடியும். ஏனெனில் இவ்வுலகில் தமிழர்கள் எவருக்கும் தேவையில்லை. அவ்வாறு தேவைப்பட்டிருந்தால் முள்ளிவாய்க்காலில் அனாதரவாக கதறியழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்காது. நேற்று தமிழர்களை காப்பாற்ற வராதவர்கள் எவரோ, அவர்கள் நிச்சயமாக நாளையும் தமிழர்களை காப்பாற்ற வரப்போவதில்லை. இதற்காக எவர் மீதும் கோபிப்பதிலும், திட்டித் தீர்ப்பதிலும் பயனில்லை. ஏனெனில் இதுதான் இன்றைய உலக ஒழுங்கு.

ஒரு அரசு, எவ்வளவு அனியாயங்களையும் செய்துவிட்டும், புவிசார் அரசியலை நுட்பமாக கையாளுவதன் ஊடாக, அதன் மீதான அழுத்தங்களை சாதாரணமாக கடந்துசென்றுவிட முடியும். தற்போதைய நிலையில் ராஜபக்சக்கள் சில விடாப்பிடி நிலைப்பாடுகளை கைக்கொள்வதால்தான் இலங்கையின் மீதான அழுத்தங்கள் தொடர்கின்றன. இதனை தமிழர் தரப்புக்கள் மறந்துவிடக் கூடாது. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் பூச்சிய நிலைக்கு சென்றதையும் நாம் இந்த இடத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை மறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் பின்நோக்கிச் சென்று கொண்டிருப்போம் என்பது மட்டுமே நிரந்தரமானது. ஆனால் நாம் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கும் சந்தர்ப்பங்களிளெல்லாம், ஆட்சியாளர்களின் செயற்பாடுகளோ முன்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்.