செய்திகள்

1000 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்: விரைவில் மீள்குடியேற்றம்

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள, பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த  அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல்கள் இன்று தெரிவிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக வலிகாமம் கிழக்குப் பகுதியில் வளலாய் கிராம அதிகாரி பிரிவில் உள்ள 220 ஏக்கர் காணி விடுவிக்கப்படும். அங்கு போரினால் இடம்பெயர்ந்த 1022 குடும்பங்கள் முன்னோடியாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளன.

இங்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 பேர்ச் காணிகள் வழங்கப்படவுள்ளதுடன், அங்கு வீடுகளை அமைக்க நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது. இங்கு பாடசாலை, ஆரம்ப பாடசாலை, மருத்துவமனை, வழிபாட்டு இடங்கள், சனசமூக நிலையங்கள், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஏனைய 780 ஏக்கர் நிலமும், போரினால் இடம்பெயர்ந்த மக்களை எதிர்காலத்தில், மீளக்குடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும். வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில், படையினர் வசம் 6,152 ஏக்கர் காணிகள் இருக்கின்றது.

இதேபோல கிழக்கு மாகாணத்திலும். கொழும்பிலும் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.