செய்திகள்

செல்போன் பேசும் நபர் இருக்கும் தெருவை துல்லியமாக காட்டும் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

பி.எஸ்.எல்.வி.சி-27 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1டி செயற்கைக்கோள் இன்று மாலை 5.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக் கோள் செல்போனில் பேசும் ஒரு நபர் இருக்கும் தெருவையே துல்லியமாக காட்டக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பெங்களூருவில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். -1 டி செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. – சி 27 ராக்கெட் திட்டமிட்டபடி சனிக்கிழமை மாலை 5.19 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் 2-ல் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள், மொத்தம் 7 சீரியல்களைக் கொண்டது. இதில் ஏற்கனவே 3 அனுப்பப்பட்டு விட்டன. 4வது சீரியல் தற்போது அனுப்பப்படுகிறது. மேலும் 3 சீரியல்கள் அனுப்பப்பட உள்ளன. ஏற்கனவே அனுப்பப்பட்ட சீரியல்களில் ஒரு செல்போனை வைத்து, குறிப்பிட்ட நபர் எங்கு இருக்கிறார் என்பதை 3 கி.மீ. சுற்று வட்டாரத்தை காட்டும். இப்போது அனுப்பப்படும் சீரியல், அவர் இருக்கும் தெருவையே துல்லியமாக காட்டிவிடும். அடுத்த கட்டமாக வணிக ரீதியாக 3 செயற்கைக்கோள்களை செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதோடு அடுத்த தலைமுறைக்கான அதிநவீன, 4 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி. – மார்க் 3 செயற்கைக்கோளை, 2016 டிசம்பரில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே சந்திரனுக்கு அனுப்பியுள்ள மங்கள்யான் தனது பணியை மிக சிறப்பாக கடந்த 6 மாதங்களாக செய்துள்ளது. மிக அரிய புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 23-ந் தேதி தனது 6 மாத சுற்று பயணத்தை முடித்து கொண்டது. அதன்பின்னர் 14 நாட்களுக்கு பிளாக் அவுட் எனும் ஓய்வில் உள்ளது. மங்கள்யானை மீண்டும் பயன்படுத்துவது குறித்து வரும் ஜூன் மாதத்துக்குள் முடிவு செய்யப்படும் இவ்வாறு கிரண்குமார் கூறினார். இஸ்ரோ தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் பொறுப்பேற்ற பிறகு விண்ணில் ஏவப்படும் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.