செய்திகள்

19வது திருத்தம் இன்று முதல் அமுல்: 4 சரத்துக்கள் புதிய பாராளுமன்றத்திலேயே நடைமுறை

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (30) முதல் அமுலுக்கு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, இதிலுள்ள நான்கு சரத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின் அமைக்கப்படும் புதிய பாராளு மன்றத்திலே அமுலுக்கு வர இருப் பதாகவும் அவர் கூறினார்.

நீதிச்சேவை ஆணைக்குழு தொடர்பான 4 சரத்துகளே இவ்வாறு அடுத்த பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் செயற்படுத்தப்பட இருக்கிறது. நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலே குறித்த சரத்துகள் அமுலாவது தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான 19 ஆவது திருத்தச் சட்ட மூலம் நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப்பட்டது. 225 எம்.பிக்களில் 212 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.

19வது திருத்தம் அமுலாகும் திகதி குறித்தும் புதிய திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமூலம் இருவேறு தினங்களில் அமுலாவது தொடர்பில் எதிர் தரப்பு ஆட்சேபனை தெரிவித்த போதும் அவர்களின் திருத்தம் நிராகரிக்கப்பட்டது. 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது.