செய்திகள்

19 ஆவது திருத்தத்தின் 104 GG உபவிதி ஊடக சுதந்திரத்தை பெரிதும் பாதிக்கும் என்று அச்சம் தெரிவிப்பு

உத்தேச 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் 104 GG உபவிதியாயனது ஊடக சுதந்திரத்தின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை செய்தித்தாள்கள் மற்றும் பிரசுரத்தார்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்கள், இந்த உபவிதி ஊடக சுதந்திரத்தை உறையவைக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்கள்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் செய்தித்தாள்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரசுரகர்த்தார்கள் என்ற வகையிலே, இலங்கை அரசியல் அமைப்புக்கான உத்தேச 19 வது திருத்தத்தின் 104 GG உபவிதி பற்றிய எமது ஆழமான அக்கறையை எடுத்துக்கூற விரும்புகிறோம். இந்த உபவிதியானது சிறிலங்காவினுடைய ஊடக சுதந்திரத்தின் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

சுருக்கமாக கூறுவதானால், உத்தேச 19வது திருத்தத்தில் இருந்த, தேர்தல் ஆணையாளரால் விடுக்கப்பட்ட வழிகாட்டல்களை மீறியது தொடர்பான ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக தனியார் ஊடகத் துறைக்கென ஒரு தகுதிவாய்ந்த அதிகாரியை நியமிப்பது தொடர்பான உபவிதியை மாற்றீடு செய்வதாக புதிய உபவிதி இருக்கிறது. இவ்வாறான ஒரு நியமனம் முறையற்றதாக இருந்தால் அதற்கெதிராக ஒரு குடிமகன் சட்ட நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகளை அதற்குள்ளேயே கொண்டிருக்கவில்லை என்பதன் அடிப்படையில் இந்த உபவிதிக்கு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்க வில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தேர்தல் ஆணையகத்துக்கு கட்டில்லாத அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறதும் அதனுடைய உறுப்பினர்களது தகுதியையும் பொருத்தப்பாடும் பொதுமக்கள் நலன்களை பொறுத்தவரை பாரியளவிலான முக்கியத்துவம் கொண்டவையென நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

எனினும் இந்த எச்சரிக்கும் விதத்திலான நீதிமன்றின் நினைப்பூட்டலுக்கு மத்தியிலும், நீதிமன்ற தீர்ப்பின் பின் உள்ளீடு செய்யப்பட்ட இந்த 104 GG இலக்க சட்டமூல வரைவானது நியாயமான காரணங்கள் இன்றி தேர்தல் ஆணையாளரின் வழிகாட்டல்களை ஊடகங்கள் மீறியிருப்பதாக கூறப்பட்டால், முன்னைய விட கடுமையான அபராதம் மற்றும் 3 வருடங்கள் வரையான சிறைத் தண்டனையையும் விதிப்பதான விளைவுகளை முன்மொழிவதாக இருப்பதை குறிப்பாக தெரிவிக்க விரும்புகிறோம். இது, தேர்தல் காலங்களிலே ஊடக சுதந்திரத்தை ‘உறைய வைப்பதில்’ போய்முடியும் என்பதன் காரணமாக, நியாயப்படுத்தக் கூடிய அக்கறையை நாங்கள் கொண்டுள்ளோம். தேர்தல் காலங்கள் தான் தகவல் அறியும் பொதுமக்களின் உரிமையை அப்பியாசிப்பதற்கான சரியான வேளையாக இருக்கும்.

முன் மொழியப்பட்டிருக்கும் 19வது திருத்தத்தின் உபவிதி 14A (2) இல் தகவல் அறியும் உரிமையை புறம் தள்ளும் வகையிலான வரையறைகளால் உருவாக்கப் பட்டிருக்கும் முரண்பாடுகள் குறித்தும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். ‘அறநெறிகள் அல்லது மற்றவர்களின் நற்பெயர் அல்லது உரிமைகளை பாதுகாப்பதற்கென’ என்பதுடன் ‘அந்தரங்கமாக பெறப்பட்ட தகவல்களை தடைசெய்தல்’ போன்ற வரையறைகளை உள்ளடக்கியிருப்பதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டவரைவின் நோக்கத்தையே முறியடிப்பதாக இது இருக்கிறது.