செய்திகள்

19, 20 திருத்தங்களை ஒன்றாக சபையில் சமர்ப்பிக்க வேண்டும்: 11 கட்சிகள் தீர்மானம்

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தமும் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

இது தவிர உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தையும் அதன்பின்னர் அரசாங்கம் முன்வைத்த திருத்தத்தையும் இணைத்து ஒரே ஆவணமாக எம்.பி. களுக்கு வழங்க வேண்டுமெனவும் இதன்போது முடிவு செய்யப்பட்டதாக ஐ.ம.சு.மு செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதன்போது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் குறித்தும் தேர்தல் மறுசீரமைப்பு குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

தேர்தல் மறுசீரமைப்பு குறித்து ஆராய நால்வரடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கடந்த வாரம் நியமித்திருந்தார். இந்த குழு 20 ஆவது திருத்தமாக தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலமொன்றை கொண்டுவருவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதன் அறிக்கை எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியிடமும் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை 19ஆவது திருத்தத்தையும் 20 ஆவது திருத்தத்தையும் ஒன்றாகக் கொண்டுவர ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

19ஆவது திருத்தச்சட்ட மூலம் 20, 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளதோடு இதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என நாளை (19) கூடி முடிவெடுப்பதாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளமை தெரிந்ததே.