செய்திகள்

20வது திருத்ததிலுள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை விடயத்தில் தமக்கு இணக்கப்பாடு இல்லை : சுசில்

அமைச்சரவையில் கடந்த திங்கட் கிழமை நிறைவேற்றப்பட்ட தேர்தல் திருத்த யோசனையான 20வது அரசியலமைப்பு  திருத்தத்தில் காணப்படும் எம்.பிக்களின் எண்ணிக்கை விடயத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு இணக்கப்பாடு கிடையாது என அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் உறுப்பினர் எண்ணிக்கை விடயத்தில் சிக்கல் உள்ளது. இது சிறுபான்மை இன மற்றும் சிறிய கட்சிகளுக்கு பாதிப்பானது. இது எந்த தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம்இருக்கின்றோம்.
இதன்படி 20வது திருத்தத்தில் அடிப்படை விடயங்களை ஏற்றுக்கொண்டாலும் உறுப்பினர் எண்ணிக்கை விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. உறுப்பினர் எண்ணிக்கை விடயத்தை எல்லை நிர்ணய ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும் நாம் கூடி ஆராய்ந்து வெள்ளிக்கிழமை எமது யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். என தெரிவித்துள்ளார்.