செய்திகள்

’20’ ஐ அமைச்சரவை ஆராய்ந்த போது ஹக்கீம் சம்பிக்க கடும் வாக்குவாதம்?

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த யோசனை அமைச்சரவையில் நேற்று முன்தினம் மாலை ஆராயப்பட்ட வேளையில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 ஆவது திருத்தத்தைக் கொண்டு தேர்தல் திருத்தத்தை மூடிமறைத்துச் செய்ய முடியாதென அமைச்சர் வலியுறுத்திய வேளையிலேயே இவர்களுடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உரத்த தொனியில் பேச முற்பட்டபோது, நீங்கள் உரத்துப் பேசி எங்களை அடக்கப்பார்க்கிறீர்களா என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆத்திரமாக கேட்டதாக அறியவருகிறது.

சிறுபான்மை மக்களை ஏமாற்றி அடக்கியாள நினைத்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் கடும் தொனியில் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முழுமையான உடன்பாடு எட்டப்படாத காரணத்தினால் புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை மூடிமறைத்துச் செய்ய முடியாது எனவும் , இன்னமும் சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், உரிய சட்டத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்க முடியாது எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கு தெரிவித்துள்ளார்.

இதன்போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுபான்மைச் சமூகங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் நன்மை அளிக்கக்கூடிய வாக்காளர்களுக்கான இரட்டை வாக்குச்சீட்டு, வெட்டுப்புள்ளி போன்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதே இந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

புதிய தேர்தல் முறை தொடர்பான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவில் அடங்கியுள்ள சிறுபான்மைச் சமூகங்களையும் சிறிய அரசியல் கட்சிகளையும் பாதிக்கும் விடயங்கள் குறித்து அமைச்சர் ஹக்கீம் பலத்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க, தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச சட்ட நகலை ஆதரித்தும் அதற்கான திருத்தங்களை எதிர்த்தும் காரசாரமாக கருத்துகளைத் தெரிவித்த போதே நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? என அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் நிலைப்பாட்டை அமைச்சர்களான பழனி திகாம்பரம், ரிசாத் பதியுதின் ஆகியோரும் ஆதரித்துள்ளனர். உத்தேச தேர்தல் திருத்தம் பற்றி இன்னும் சரியான தீர்மானம் எடுக்கப்படவில்லை. சிறுபான்மைச் சமூகங்களையும் சிறிய கட்சிகளையும் சமாளிப்பதற்காக இடையிடையே மேலோட்டமாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவே தவிர, சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு பிரஸ்தாப அரசியலமைப்பின் 20 ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் பற்றி அறிவுறுத்தல் வழங்குமளவிற்கு தீர்மானம் எட்டப்படவில்லை என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கட்சித் தலைவர்களுடனும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவதாக கூறி அவர்களது வாய்ச்சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.