செய்திகள்

20 நிறைவேற்றும் உறுதிக்கமையவே 19 ஆதரிக்கின்றோம்: நிமல் சிறிபால டி சில்வா

பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் 20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப் படும் என்ற ஜனாதிபதியின் உறுதி மொழிக்கு அமையவே 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித் திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்ற வரலாற்றில் முக்கிய நாள் இது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

19வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டது முதல் அதில் பலதடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனைக் குழப்புவது எமது நோக்கம் அல்ல. அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன்னர் அது குறித்து பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கருத்து பெறப்பட வேண்டும்.

19வது திருத்தச்சட்டமூலத்துக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. அது கொண்டு வரப்பட்ட முறை தொடர்பிலேயே எமது கருத்துக்களை வெளியிட்டோம். 19ஆவது திருத்தம் தொடர்பில் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் மக்களுக்குப் பொய்யான கருத்துக்களைக் கூறுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

இந்தத் திருத்தச்சட்டமூலத்தை நிறை வேற்றுவதன் மூலம் வீரர்களாவதற்கு சிலர் பார்க்கின்றனர். இதனை நிறைவேற்றினால் நாம் சகலரும் வீரர்களே. 19ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் நெகிழ்வுப்போக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த யாப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதியுடன் பல தடவைகள் கலந்துரையாடினோம்.

இந்தத் திருத்தச்சட்டமூலத்தில் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகள் காணப்படு கின்றன. சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலர் தான்தோன்றித் தனமாக நடக்கின்றனர். இவர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு வழங்கப்பட வேண்டும்.

நீதி அமைச்சர் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனுமதியுடன் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரிவை ஏற்க முடியாது. இதனை நாம் எதிர்க்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 19ஆவது திருத்தத்தை எதிர்க்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதற்கு முன்னர் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும். இதற்காக தேர்தல் மறுசீரமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.

தேர்தல்முறை மாற்றத்தைக் கொண்ட 20வது திருத்தச் சட்டமூலம் இந்த பாராளுமன்றக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமையவே 19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். ஐ.தே.கவுக்கு இதனை நிறைவேற்றும் தேவை கிடையாது. இருந்தாலும் எமக்குத் தேவையாக உள்ளது.