செய்திகள்

29 இராஜதந்திரிகளை உடன் திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு உத்தரவு

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமனம் பெற்று வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் பணிபுரிவதற்காகச் சென்ற 29 இராஜதந்திரிகளை உடனடியாக இலங்கை திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அரசியல் நியமனம் பெற்ற இராஜதந்திரிகளை நாட்டுக்கு அழைக்கும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். இது, அரசாங்கம் மாறும்போது இடம்பெறும் வழக்கமான நிகழ்வு என அவர் தெரிவித்தார்.

அரசியல் செல்வாக்கு மூலம் நியமிக்கப்பட்ட மற்றும் ஒரே நிலையத்தில் நீண்டகாலமாக கடமையாற்றும் இராஜதந்திரிகள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளவர்களில் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதுவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இவர் தொடர்ச்சியாக அங்கு எட்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அரசியல் செல்வாக்கு எதுவும் இல்லாமல் சுயாதீனமாக வெளிவிவகார சேவையை செயற்பட அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்தமைக்கு ஏற்றவாறே இவர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடனேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், பாப்பரசர் வருகை மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரவீரவின் இந்திய விஜயம் என்பவற்றால் தாமதமாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.