செய்திகள்

6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்ரவதை செய்த கொடூரன் கைது!

குஜராத்தில் முன் விரோதம் காரணமாக உடன் வேலை பார்க்கும் தொழிலாளியின் 6 வயது மகளைஇ இரும்புக் கம்பியால் பாலியல் சித்ரவதை செய்த கோடூரனைப் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்தும் பெண்களை பாலியல் ரீதியாக  வயது வித்தியாசம் இல்லாமல் இந்த சமூகம் வஞ்சித்துத் தான் வருகிறது என்பதற்கு இந்த பாலியல் வன்முறை மேலும் சாட்சியமாயிருக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா, கும்பல் ஒன்றால் கோடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம், தற்போது ஆவணப்படமாக எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் குற்றவாளி ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதன்மூலம், பெண்களை மற்றும் அவர்களது குடும்பத்தினரைப் பழி வாங்க, காயப்படுத்த எதிராளிகள் கையாளும் முக்கிய ஆயுதம் பாலியல் வன்கொடுமை தான் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. இந்த பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், குஜராத்தில் நிர்பயாவைப் போன்றே 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக அனில் சிங் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியருக்கும் கடந்த ஓராண்டு காலமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால், அந்த ஊழியரைப் பழி வாங்க நினைத்த இளைஞர், அவரது 6 வயது மகளைக் கடத்திச் சென்றார். பின்னர், அச்சிறுமியின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அச்சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றிய அனில் சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தையும் மருத்துவ பரிசோதனை முடிவுகளையும் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லையென்றும் ஆனால் அவளின் அந்தரங்க உறுப்பை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.