செய்திகள்

60 பேரின் காணி உறுதிகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது! ரணில் சந்திரிகாவுடன் யாழ் வருகை

யாழ்ப்பாணத்துக்கான குறுகிய நேர விஜயம் ஒன்றை இன்று பகல் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெல்லிப்பழை, கோப்பாய் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வயாவிளான், வளலாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 60 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார்.

பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த சில கிராமங்கள் விடுவிக்கப்பட்டு அங்குள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வளலாயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வளலாய் கிராம அலுவலர் பிரிவு மற்றும் வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வயாவிளான் ஆகிய கிராமங்கள் மக்களின் மீள் குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டன. இவற்றுக்காக காணி பத்திரங்களை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் உரியவர்களிடம் கையளித்தனர்.

இந்த நிகழ்வில், அமைச்சர்களான குணவர்த்தன, டி.எம்.சுவாமிநாதன், திருமதி விஜயகலா மகேஸ்வரன், இராணுவ,பொலிஸ் அதிகாரிகள், யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபபினர்களான மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவன், க.சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை உறுப்பினர்கள், வலி. கிழக்கு, வலி. வடக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினாகள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.