செய்திகள்

தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தின் “இலவு” குறும்பட வெளியீட்டு விழா

[youtube url=”https://www.youtube.com/watch?v=weag-YKuTuA&feature=youtu.be” width=”500″ height=”300″]

இலண்டன் தமிழ்அரங்கியற் காணொலிக் கலை மன்றம் (CTTVA) நடத்திய இலவு குறும்பட வெளியிட்டு விழா 18 தை 2015 மேற்கு லண்டன் கவுன்ஸ்லோவில் இடம்பெற்றது. அரங்கியலையும் திரைத்துறையையும் தமிழர் மத்தியில் வளர்த்தெடுக்கும் நோக்கோடு இயங்கி வரும் CTTVA, குறும்படத்துறையில் முழு முயற்சியோடும் ஆர்வத்தோடும் ஈடுபடும் திரைத்துறை கலைஞர்களை ஊக்கவிக்கும் முகமாக இந்த வெளியீட்டு விழாவை நடத்தியிருந்தது. யாழ்ப்பாணத்தில் திரு.வரோதயனால் இயக்கம் செய்யப்பட்டு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட “இலவு” என்ற குறும்பட விழாவை CTTVA இயக்குனரும், பிடிக்கல பிடிக்கல நாடக இயக்குனருமான திரு சாம் பிரதீபன் அவர்கள் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார் . இந்த விழாவில் திரைப்படத் துறையின் ஆய்வாளரும் கலை இலக்கிய முற்போக்கு எழுத்தாளருமான திரு.யமுனா ராஜேந்திரன், “மண்” மற்றும் “யாவும் வசப்படலாம்” போன்ற திரைப்படங்களின் இயக்குனர் திரு.புதியவன், “காதலே என்னை காதலி” திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.துரை ஆகியோர் பிரதம பேச்சாளர்களாக கலந்து கொண்டு குறும்படம் பற்றிய தமது விமர்சன உரைகளை நிகழ்த்தினார்கள்.

திரு.துரை அவர்கள் பேசும்போது ஈழத்து திரைப்படங்களுக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமை பற்றியும் இளம் கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டிய தேவை பற்றியும் தன்னுடைய தயாரிப்பு அனுபவங்களோடு பேசியிருந்தார்.

 film cover

ஈழத்து திரைபடத்துறையில் முக்கியமானவரான இயக்குனர் திரு.புதியவன் தன்னுடைய கருத்துக்களை உண்மையோடும் இலவு பற்றிய முழு அலசலோடும் பகிர்ந்திருந்தார். விடா முயற்சியோடு பல திரைப்படங்களை இயக்கி, வெளியீடு செய்து, விற்பனையாக்கிய நீண்ட பல திரைத்துறை சார் அனுபவங்களோடு புதியவன் காத்திரமான பல விடயங்களை முன்வைத்தார். இவரைத்தொடர்ந்து திரு.யமுனா ராஜேந்திரன் அவர்கள் தனக்கே உரித்தான விமர்சனப்பார்வையில் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். உலக சினிமாவில் இருந்து ஈழத்து சினிமாவரை ஆழமான பார்வையைக் கொண்ட யமுனா அவர்கள் இலவு குறும்படத்தின் கதைக் கருவின் தேர்விலிருந்து, இயக்கம், ஒலி, ஒளி, படத்தொகுப்பு, பாத்திரங்கள், நடிப்பு என்று ஒவ்வோர் அங்கமாக தன்னுடைய விமர்சனங்களை முன்வைத்தார்.

இதேவேளை சிறப்பு விருந்தினராக திரைப்படத் துறையின் முன்னோடிளுள் ஒருவரான மதிப்பிற்குரிய திரு.றகுநாதன் அவர்களும் பிரான்சில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டு ஈழத்து திரைத்துறை வளரவேண்டும் என்று வாழ்த்துக்களையும் தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். 80 வயதை எட்டி நிற்கும் ரகுநாதன் அவர்கள் ஈழத்து அரங்க்கிற்கும் திரைத்துறைக்கும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி CTTVA அமைப்பின் சார்பாக புலவர் சிவநாதன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இறுதியாக Skype இற்கூடாக கலந்துகொண்ட இலவு குறும்படத்தின் இயக்குனர் வரோதயன் தன்னுடைய ஏற்புரையை வளர்ந்து வரும் திரைத்துறைக் கலைஞனுக்குரிய பக்குவத்தோடு எற்றுக்கொண்டார்.

வழமையான போற்றுதல்கள் புகழ்பாடல்கள் என்றில்லாமல் ஆரோக்கியமான வளர்ச்சி நோக்கி உந்தித்தள்ளும் ஒரு வெளியீடாக “இலவு” குறும்பட வெளியீடு அமைந்ததுடன் திரைத்துறைப் பட்டறையில் பங்குபற்றியதுபோல் இருந்ததாக பங்கு பற்றியோர் குறிப்பிட்டர்கள்.
ILC வானொலியின் அனுசரணையோடு, திரு ரஜீவன் அவர்களின் ஆதரவோடு CTTVA நடாத்திய இலவு குறும்படவெளியீட்டு நிகழ்வில் திரைப்படத் துறை சார்ந்த பல நடிகர்களும் ஆர்வலர்களும் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.