செய்திகள்

புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் தமிழ்மாறன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தனது பெயர் களங்கம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளரும் பீடாதிபதியுமான வி. ரி. தமிழ்மாறன்,கடந்த சில நாட்களாக நடந்தவை எல்லாம் தமிழ்மக்கள் மத்தியில் தனக்கு இருந்துவரும் அரசியல் அங்கீகாரத்தையும் சட்டவாளர் என்றளவில் இருக்கும் கௌரவத்தையும் சிதைப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்று குறிப்பிட்டிருப்பதுடன் தீவகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகள் யாருக்கோ பொறுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

எனது கண்முன்னால் யாழ் பொலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரால் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் எப்படித் தப்பிச் சென்றார் என்பதற்கு என்னிடம் விடையில்லை. இதற்கு விடையளிக்க வேண்டியவர்கள் காவல்துறையினரே.

பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.

என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ்மக்கள் மத்தியில் எனக்கு இருந்துவரும் அரசியல் அங்கீகாரத்தையும் சட்டவாளர் என்றளவில் எனக்கு இருக்கக்கூடிய கௌரவத்தையும் ஒரே நாளில் பூச்சிய நிலைப்படுத்தும் நோக்கில் மாதக்கணக்கில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகத்தின் காட்சிகளையே கடந்த சில நாட்களாக மக்கள் தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.

முற்றிலும் எதிர்பார்த்திராததும் அனுபவமற்ற விதத்திலும் என்னை எதிர்கொள்ள வைத்த இந்த சத்தியசோதனைத் தீயிலிருந்து நான் மீள்வதற்கான முயற்சி இலேசுப் பட்டதாக இருக்கவில்லை. எவையெவை என்னுடைய பலமோ அவற்றை இலக்குவைத்துத் தொடுக்கப்பட்ட களைகளின் நச்சுத்தன்மைபற்றி சாதாரண மக்கள் மட்டுமன்றி விடயமறிந்தவர்கள்கூடச் சற்றுத் தடுமாறித்தான் போய்விட்டார்கள்.

35 வருட என்னுடைய சட்டத்துறையறிவையும் மனித உரிமைகள், பெண் உரிமைகள் பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அறிவூட்டலில் நான் ஆற்றியிருக்கும் பங்கினை எள்ளளவேனும் அறிந்திராத மிலேச்சர்களால் பின்னப்பட்ட சதிவலையில் அப்பாவிப் பொதுமக்கள் இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளார்கள். இது மட்டுமே எனக்கு நெஞ்சுபொறுக்காத விடயமாகக் காணப்படுகின்றது. இத்தனை வருட கால சேவையின் பின்னும் வாடகை வீட்டில் குடியிருந்து மாதச் சம்பளம் கொண்டு வாழ்க்கை நடாத்தும் நான் 40 இலட்சமென்ன 40 கோடி கொடுத்தும் விலைபேசப்பட முடியாத அரசியல் தளத்தில் தடம் பதித்தவன் என்பதை நன்கு தெரிந்தவர்கள் தமது அரசியல் எதிர்காலத்தின் இருப்புக்கு என்னால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலால் உந்தப்பட்டு எனது உயிருக்கும் அதனிலும் மேலான எனது நேர்மைத் திறனுக்கும் வேட்டு வைக்க முயற்சித்துள்ளார்கள்.

தத்தமது ஊன்றிய நலன்களால் உந்தப்பட்ட, ஆனால் அதேவேளை தமக்குள்ளே அரசியலால் மாறுபட்ட மூன்று முக்கிய சக்திகள் சம்பவ தினத்தன்று ஒன்றுபட்டுச் செயற்பட்டவிதமே என் மீது அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை உணர வைப்பதற்குப் போதுமானது. ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடாத்தியவர்களும் அவை நடாத்தப்பட்ட இடங்களும் வித்தியாவுக்கு நடந்த கொடூரத்துக்கான கோபக்கனலை வெளிப்படுத்துவதைவிட எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவ தையே இலக்காகக் கொண்டிருந்தமையை வெளிப்படுத்தியது.

நான் ஒரு குற்றவியல் சட்டத்தரணி அல்ல. மேலும், முழுநேர பல்கலைக்கழக ஊழியர் என்றளவில் நான் நீதிமன்றில் ஆஜராகவும் முடியாது. அப்படிச் செய்வதானால் அதற்கான விசேட அனுமதி பெறப்பட வேண்டும். என்னால் செய்யக் கூடியதெல்லாம் உரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவும் நீதியான விசாரணை நடைபெறவும் தீவிரமாக முயற்சிப்பதுதான். அதனையே நான் செய்தேன். அது சில சக்திகளுக்குப் பொறுக்கவில்லை. குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு தீவகத்தில் நிலைநாட்டப்படுது யாருக்கோ எங்கோ உதைக்கின்றது.

கருத்தை கருத்தால் மோத முடியாதவர்கள் ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதன் மூலம் வெற்றி காணமுடியுமாயின் அத்தகைய விமர்சனத்திலிருந்து எவரொருவரேனும் தப்பிக்க முடியுமா என்பதையும் அறிவுடையவர்களின் தீர்மானத்துக்கு விட்டுவிடுகின்றேன்.

எனது கண்முன்னால் யாழ் பொலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரால் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் எப்படித் தப்பிச் சென்றார் என்பதற்கு என்னிடம் விடையில்லை. இதற்கு விடையளிக்க வேண்டியவர்கள் காவல்துறையினரே. இதே சந்தேக நபர் முதல்நாள் இரவும் மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்டதன் பின்னர் தப்பித்துள்ளார். அது எப்படி நடந்தது என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம். யார் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க ரொக்கட் விஞ்ஞானம் தேவைப்படாது. இதில் பொறுப்புணர்வுடன் செயற்பட்ட ஊடகங்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

மண்ணை நேசிக்கும் மனட்சாட்சியுள்ள மக்களின் மனக்குமுறல் தற்போது படிப்படியாக என்னை எட்டுவது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. உண்மை எந்தளவுக்கு விரைவாக வெளிவர வேண்டுமோ அந்தளவுக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது. நான் கற்றதும் கற்பித்ததும் ஒருபோதும் வீண்போகாது என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.