செய்திகள்

புலம்பெயர் தமிழர்களுக்கான அரசின் அழைப்பை வரவேற்கிறேன் : டக்ளஸ் தேவானந்தா

புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் இந்த அரசு கொண்டிருக்கும் நல்லெண்ணப் போக்கு வரவேற்கத்தக்கது. இலங்கை நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பொருளாதார மேம்பாட்டை எட்டுவதற்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்புகளும் இன்றியமையாதவை.

இதனை விரைந்து முன்னெடுப்பதற்கும், புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் மீதான தடைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை அகற்றுவது தொடர்பிலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், புலம்பெயர் தமிழ் மக்களுடன் அரசு பேச்சுவார்த்தைகள் நடாத்தி, அவர்களையும் எமது நாட்டின் வளர்ச்சியில் இணைத்துக் கொள்வது ஆரோக்கியமான செயற்பாடாகும். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அறிவு மற்றும் ஆற்றல்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் மக்களது உணர்வுகளை வென்றெடுப்பதன் மூலமே இது சாத்தியமாகும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு முதலீடுகளைப் பெறவும், அதன் ஊடாக எமது மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், இதனால் வழியேற்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் பாரிய துணையாக அமையும்.

எனவே, இந்த அரசு மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கை பாராட்டுக்குரியதும், வரவேற்கத்தக்கதுமாகும். அதே நேரம், குறிப்பிட்ட சில புலம்பெயர் அமைப்புக்களுடன் மாத்திரம் இவ் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தாமல், ஏற்கனவே நாட்டின் நெருக்கடிமிகுந்த காலகட்டங்களில்கூட எமது நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கும், தமிழ் மக்களின் நலன்கள் கருதியும் உதவ முன்வந்திருந்த பல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களையும் இணைத்து, பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு இலக்குகள் எட்டப்பட வேண்டும். அதன் மூலமே இம் முயற்சி பூரணத்துவம் பெறுவதாக அமையும்.

புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு இணைத்துக்கொண்டு, எமது நாட்டின் மேம்பாடு தொடர்பில் செயற்படுவது குறித்து இனவாதக் கருத்துக்கள் உண்டு. இதனை அகற்றும் வகையில் சிங்கள மக்களிடையே உரிய தெளிவுகள் ஏற்படுத்தப்பட்டு, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெறச் செய்வது அவசியமாகும்.

சமூகங்களிடையே பகைமை உணர்வுகளை வளர்த்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது ஆரோக்கியமானதல்ல எனவும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.