செய்திகள்

மே தினப் பலப்பரீட்சையும்: பாராளுமன்ற மோதல்களும்

அரசியலில் தமது ஆதரவைக் காட்டுவதற்கான பலப்பரீட்சையாக மே தின பேரணிகளை ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய பிரதான அரசியல் கட்சிகள், அதன்தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன.

மே தினப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் தொகை குறித்து முரண்பாடான தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும், மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான கிருலப்பனைப் பேரணியில் கணிசமான ஒரு தொகையினர் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது உண்மை.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 பேர் வரையில் இதில் கலந்துகொண்டிருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கவேண்டிய நிலையில் கட்சித் தலைமை இருப்பதும் தெரிகின்றது.

இந்த நிலையில் அரசியல் பலப்பரீட்சையாக அமைந்த மே தினப் பேரணிகள், அதன் தொடர்ச்சியாக இடம்பெறும் அதிரடியான அரசியல் சம்பவங்கள் குறித்து இந்த வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்.

மே தினப் பேரணிகள்

கொழும்பு கம்பல் பார்க்கில் நடைபெற்ற ஐ.தே.க.வின் மே தினப் பேரணியில்தான் அதிகவு கூட்டத்தைக் காணக்கூடியதாகவிருந்ததாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சுமார் இருபது வருட காலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருந்தாலும், பலம்வாய்ந்த தனிக்கட்சியாக ஐ.தே.க.தான் இருக்கின்றது என்பது இந்தப் பேரணியின் மூலமாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக வரப்போகும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் குறித்து ஐ.தே.க. தலைமைக்கு உற்சாகமூட்டுவதாக இந்தப் பேரணி அமைந்திருக்கலாம்.

5ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரையில் அதன் ஆதரவாளர்கள் இரண்டாகப் பிளவுபட்டிருப்பது இந்த மே தினத்தில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் செல்வாக்கைக் குறைப்பதற்காக நகர்வுகளை எவ்வளவுக்குத்தான் அரசாங்கம் முன்னெடுத்தாலும், அவருக்கான ஆதரவுத் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது வெளிப்படையாகியுள்ளது. அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், தனக்கான ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் மகிந்த வெற்றிபெற்று வருகின்றார்.
4
காலியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பேரணியிலும் கணிசமான தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். மைதானம் நிறைந்திருந்தது. தென்பகுதிக்கான விரைவுச் சாலை இலவசமாக திறக்கப்பட்டிருந்தது. அதனால், பெருந்தொகையானவர்கள் காலிக்கு விரைய முடிந்தது. காலியுடன் ஒப்பிடும் போது கிருளப்பனையில் மகிந்த ஆதரவுப் பேரணி நடைபெற்ற மைதானம் சிறியது. ஆனால், அது மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.

40 எம்.பி.கள் வருகை

இவ்வருடம் மேதினப் பேரணிகள் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தமைக்கு பிரதான காரணம் மகிந்த ராஜபக்‌ஷ தனியாகப் பலப்பீட்சையில் இறங்கியிருந்தமைதான். சுதந்திரக் கட்சியின் எந்த அணி பலமக உள்ளது என்பதைப் பார்க்க மக்கள் ஆவலாக இருந்தார்கள். மகிந்தவின் கூட்டத்துக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ‘வழமைபோல’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும், 40 க்கும் அதிகமான எம்.பி.க்கள் அங்கு சென்றிருந்தார்கள்.
2
ஆனால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் போல தெரியவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்கள் தனியாகச் செல்வதற்கும் போட்டிக்கட்சி ஒன்றை அமைப்பதற்கும் அது வழிவகுத்துவிடும் என்பதால், கட்சித் தலைமை பொறுமையாக இருப்பதாகத் தெரிகின்றது. உண்மையில் தம்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான் மகிந்த ஆதரவாளர்கள் விரும்புவதாகத் தெரிகின்றது. தாமாக வெளியேறுவதைவிட கட்சித் தலைமை தம்மை வெளியேற்றட்டும் என அவர்கள் காத்திருப்பதாகத் தெரிகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தன்னுடைய தலைமையில் ஒருமைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றது. கட்சி மத்தியகுழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கட்சியின் உயர் மட்டத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ராஜபக்‌ஷவும் குடும்பத்தினரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டனர். இவ்வளவுக்குப் பின்னரும் 40 க்கும் அதிகமான எம்.பி.க்கள் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல் ராஜபக்‌ஷவுக்குப் பின்னால் செல்வதற்குத் தயாராகவிருக்கின்றார்கள் என்பது மைத்திரிபால சிறிசேனவுக்கு பாரிய தோல்வியாகவே பார்க்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு வாபஸ்

மே தினத்துக்கு மறுநாள் திங்கட்கிழமை மகிந்த ராஜபக்‌ஷவுக்கு தெளிவான பதிலடி ஒன்று கிடைத்தது. அவரது பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டிருந்த 102 இராணுவத்தினர் அவசரமாக திரும்பப்பெறப்பட்டனர். அதற்குப் பதிலாக பொலிஸ் மற்றும் விஷேட அதிரபப்படையினர் அனுப்பப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உட்பட முக்கிய தலைவர்களுக்கு இவ்வாறான பாதுகாப்புதான் வழங்கப்படுகின்றது என அரசாங்கம் இதனை நியாயப்படுத்தியது. முக்கிய பிரமுகர்களுக்கு பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பே வழங்கப்படுவதாக அரச தரப்பில் சொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி எனப்படும் மகிந்த ஆதரவு தரப்பினர் தயாராகவில்லை.
6
ராஜபக்‌ஷவின் உயிருக்கு இதன்மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை இவர்கள் குரல்கொடுக்க அது பாரிய மோதலாகியது. இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான இந்த மோதல்களின் போது, பல எம்.பி.க்கள் காயமடைந்தனர். இரண்டு எம்.பி.க்கள் ஒரு வார காலத்துக்கு இடை நிறுத்தப்பட்டார்கள். பாராளுமன்றம் இந்த நிலைமைகளால் தொடர்ந்தும் பதற்றமான நிலையிலேயே இருக்கின்றது.
01
மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டமைக்கு அரசியல் காரணங்கள் மட்டுமன்றி, பாதுகாப்பு ரீதியான காரணங்கள் சிலவும் இருப்பதாகத் தெரிகின்றது. மா◌ாச் இறுதிப்பகுதியில் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தொடர்ச்சியான கைதுகள் இடம்பெறுகின்றன. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் சிலரும் கைதாகியுள்ளனர். இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்டவர்கள் எனக்கூறப்படுகின்றது. இராணுவத்திலுள்ள பெரும்பாலானவர்கள் கோதாபாய ராஜபக்‌ஷவினால் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். புலனாய்வுப் பிரிவு அவருடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்துள்ளது. மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டமைக்கு இவையும் காரணமாக இருந்திருப்பதாகத் தெரிகின்றது.

எது எப்படியிருந்தாலும் மே தினத்தில் ஆரம்பமான பலப்பரீட்வை மேலும் தொடரும் அறிகுறிகளே தெரிகின்றது.

– சபரி