செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலைப்பாடும்

தமிழ் நாட்டிலிருந்து அங்குள்ள பெண்கள் இயக்கத்தினைச் சார்ந்த பெண்ணிலைவாதியொருவர் ஜுன் மாதம் 23ம் திகதி சர்வதேச விதவைகள் தினத்தினை நினைவுகூரும் ஓர் சிறிய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இது வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சுமார் 30 பெண்களின் பங்கேற்றலுடன் நடந்தது. குறிப்பிடக்கூடத் தேவையில்லாத சம்பவம். ஆனால், துரதிர்~;டவசமாக வட மாகாணத் தேர்தல் இடம்பெறப்போகும் காலத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த புலனாய்வாளர்களினால் இது ஸ்ரீலங்கா அரசினை நிலைகுலையச் செய்ய தமிழ்நாடு செய்கின்ற சதித்திட்டம் என்று தலைமையகத்துக்கு அறிக்கையிடப்பட, ஆரம்பித்தது சதிராட்டம். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு இந்த விடயம் கையளிக்கப்பட்டு உடனேயே குறிப்பிட்ட பெண்ணிலைவாதி நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். திவயின பத்திரிகையின் ஞாயிற்றுக்கிழமை வெளியீட்டில் இந்த “சதித்;திட்டம்” ஒரு முழுப்பக்;கத்தில் அம்பலமாக்கப்பட்டது. அடுத்த ஒரு வருடமாக சம்பந்தப்பட்ட உள்;ர் நிறுவனம் விசாரணைக்குட்படுத்தப்பட்டது. அதன் கிளை அலுவலகங்கள் மீதும் புலன் விசாரணையாளர்கள் படையெடுத்தார்கள். அந்நிறுவனம் வடக்கில் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்சினையில் சிக்குண்டு அச்சமுற்றுக் கிடந்த களப்பணியாளர்கள் பலர். அவர்களிடம் போய் இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யப்போகிறீhகள் என்கின்ற கேள்வி போடப்பட்டது. “அன்னத்துக்கு வாக்களிக்கின்றோம்” எனப் பட்டென வந்தது பதில்.

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கடையொன்றினை நடத்தி வந்தவர், அவ்வியக்கத்தினைச் சோந்தவர் என்கின்ற அடிப்படையில் பனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் தனது குடும்பத்துடன் யாழ் மாவட்டத்தில் குடியேறினார். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவர் ஒவ்வொரு மாதமும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போய் கையொப்பம் இடவேண்டும். ஒரு முறை சென்றபோது தடுத்து வைத்தார்கள். பின்பு கேட்ட கேள்வியின்றி பூஸா முகாமுக்கு கொண்டு சென்று விட்டார்கள். என்ன ஏது என்று யாருக்கும் புரியவில்லை. எப்பொழுது அவர் விடுவிக்கப்படுவார் என்பதும் புரியவில்;லை. குடும்பமோ நிராதரவாக நின்றது. அந்தப் பிரதேசத்தில் புனர்வாழ்வு முகாமிலிருந்து வந்து குடியிருக்கக்கூடிய ஏனைய நபர்களுக்கும் அச்சம் தொற்றிக்கொண்டது. தம்மை எப்பொழுது கொண்டு செல்வார்களோ என்கின்ற பீதியில் வாழ்ந்து வந்தனர். இம்முறை இம்மக்களைச் சென்று அதே கேள்வியைக் கேட்டார்கள். “அன்னம்” எனப் பதில் வந்தது.

ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச அவர்கள் ஒரு காலத்தில் ஜனாதிபதி பிரேமதாசாவின் பயங்கர ஆட்சிக்கு எதிராகப் போராடியவர். அந்நேரம் இலங்கையிலும் ஜெனீவா மனித உரிமைகள் சபையிலும் அவர் பல அரசு சாராநிறுவனங்களுடன் நெருங்கி வேலை செய்தவர். அரசு சாரா நிறுவனங்கள் மக்கள் மத்தியில் எத்தகைய விழிப்புணர்வுகளைக்கொண்டு வர இயலுமானவை எவ்வாறு அவர்கள் மத்தியில் கருத்துருவாக்கி அணி திரட்டக் கூடியன என்பதை அவர் அறிவார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி கொலை செய்யப்பட்ட வேளையில் நாட்டில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலையைக்கூட பொருட்படுத்தாது ஜனத்திரள் கொழும்பு கணத்தை மயானத்தில் கூடியது. அதற்குள் கொதித்த ஆத்திரமானது, அம்மரணச்சடங்கில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதி ஆலோசகர் திரு தயான் ஜயதிலகவை ஆடை உரித்து நிர்வாணமாக்கும் அளவுக்குச் சென்றது! இனங்களுக்கிடையிலான நீதியையும் சமத்துவத்தையும் பேணும் இயக்கம், மற்றும் தேவசரண போன்ற அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செய்த அரசியல் வேலையின் பயனாகவே மக்கள் அணி திரண்டனர் என்று கூற வேண்டும். இந்த அனுபவத்தினால் படித்துக்கொண்ட பாடத்தின்படி, அவருடைய ஆட்சியின் கீழ் மக்கள் மத்தியில் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இரும்புக் கடிவாளம் போடும் கொள்கையை செயற்படுத்தினார். ஏன்ஜிஓ என்றாலே அரசியல்வாதிகளுக்கும் அரசு நிர்வாகத்தினருக்கும் நரி வெருட்டும் அளவுக்கு இந்த வேட்டை தொடர்ந்தது. அது மட்டுமன்றி, பொது மக்கள் மத்தியில் எந்நேரமும் பயப்பிராந்தியை ஏற்படுத்துவதும் இவருடைய முக்கிய மூலோபாயமாயிற்று. புனர்வாழ்வு முகாமில் பிரச்சினையின்றி விடுவிக்கப்பட்ட அந்த அப்பாவி நபரை பூஸாவில் அடைத்ததும் அதற்காகத்தான். சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் கிரீஸ் மனிதனை உலாவ விட்டதும் அதற்காகத்தான். இக்கொள்கையினால் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கு பயம் என்கின்ற சொல்லே அவர்களுடைய தாரக மந்திரமாயிற்று. தினந்தினம் அச்சத்திலும், தமக்குள் கூடிக் கலந்துரையாட முடியாத நிலையிலும், புத்தி ஜீவிகளுடன் சுதந்திரமாக இயங்க முடியாத நிலையிலும் உள்ள மக்கள் தமது விடிவிற்காகப் போராடும் மக்களாக எழுச்சி காண முடியுமா? அந்த வகையில் சிறுபான்மைத் தேசியங்களை ஒடுக்கும் நடைமுறையில் முன்னைய ஜனாதிபதிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் எமது ஜனாதிபதி மகிந்த. இதற்கெல்லாம் பதிலடியாக, இன்று ஓர் தனியார் ஆய்வு நிறுவனம் நடத்திய உத்தியோக பூர்வமற்ற கருத்துக்;கணிப்பின்படி வடக்கு கிழக்கில் மைத்ரிபாலவுக்கு கிட்டத்தட்ட 88வீதம் ஆதரவு இருப்பதாகக் கணிக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கையினால் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பினையும் சம்பாதித்துக்கொண்டிருக்கும் போது இக்கணிப்பில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையாகும்.
வட பகுதியில் மட்டுமா பயம்? தென்பகுதியிலும்தான். இங்கு தமிழில் எதனையும் எழுதித் தப்பிக்கொண்டு போகலாம். தமிழ் மக்களின் அபிப்பிராயம் ஒன்றும் தமது ஆட்சியைப் பாதிக்காது என்கின்ற ஆட்சியாளர்களின் அலட்சியமே இதற்குக் காரணமாகும். ஆனால் ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ எழுதுபவர்களுக்கு அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லையாகும். இங்கு காணாமல்போன, நாட்டை விட்டு ஓடிய ஊடகவியலாளர்கள் அதற்கு சாட்சி பகர்வர். அரச நிர்வாகம், நீதித்துறை, பல்கலைக்கழகம் எல்லாமே அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. எங்கேயும் வாய் திறந்தால் தகவல் ஆட்சியாளர்களுக்குப் பறந்தது. இந்த ஆட்சிக்கெதிராக விமர்சனம் முன்வைப்பதற்கு பலர் தயங்கினர், மைத்ரி தனது வெளிநடப்பினால் அந்தப் பயத்தை உடைக்கும் வரையிலும். அதனால்தான் இன்று பல்கலைக்கழகங்களைச் சார்ந்த புத்தி ஜீவிகள், கலைஞர்கள், தொழிற்சங்க வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என ஓர் பொது மக்கள் படையே மைத்ரியின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கின்றது. தம் மீது இடப்பட்டிருக்கும் இக்கடிவாளம் அறுத்தெறியப்படுவதே தாம் ஓர் சுதந்திர நாட்டின் பிரஜையாக வாழுவதற்கான முதல் படி என சகல பாதிக்கப்பட்ட மக்களும் இன்று ஒன்றிணைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயினும் தமிழ் தரப்புக்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் எழுவதைப் பார்க்கின்றோம். போட்டியிடும் இரு பிரதான தரப்புக்களும் பௌத்த சிங்கள கருத்தியலை முன்வைப்பவர்கள் என்பதனால், இருவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே என்றும் எவரினதும் வெற்றிக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்கக்கூடாது என்பதே அக்கருத்துக்களில் பிரதானமானதாகும். இத்தேர்தலின் பிரதான போட்டியாளர்களை 19ம் 20ம் நூற்றாண்டுகளில் காலனித்துவவாதிகளாக இருந்த ஆங்கிலேயர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் ஒப்பிடலாம். காலனித்துவ ஆட்சியின் மூலம் தென் கோள நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதும், இனத்துவே~ம் மிக்க கொள்கைகளை செயற்படுத்துவதும் என ஆங்கிலேயருக்கும் ஜேர்மானியர்களுக்கும் கருத்தியலில் வேறுபாடு இருந்ததில்லை. ஆனால் நிச்சயமாக அக்கருத்தியலினைச் செயற்படுத்தும் முறைகளில் வேறுபாடு இருந்தது. உதாரணமாக, காந்தி வாழ்ந்த இந்;தியாவினை ஹிட்லர் ஆண்டிருந்தால் என்ன விளைவு என்னும் கற்பனைக் கேள்வியைப் போடலாம். சத்தியாக்கிரகம் என்னும் மக்கள் போராட்டம் அங்கு மலர்ந்திருக்க வாய்ப்புண்டா? ஹிட்லர் ஆட்சியின் கீழ் எத்தனையோ மக்கள் எதிர்ப்பப் போராட்டங்கள் இருந்;திருக்கின்றன, ஆனால் அவை விடியலைக் காண முன்பே பூண்டோடு அழிக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் எப்பொழுதும் தமது நீண்டகால இலக்குகளைக்கொண்டு செயற்படுபவர்கள் என்பதனால் அதற்குத் தேவையான உறவுகளுக்குப் பங்கம் விளைவிக்கா வண்ணம் தாம் ஆண்ட நாடுகளின் மக்களுக்கு சில ஜனநாயக வெளிகளைக்கொடுத்து வைத்திருந்தார்கள். அவ்வுபாயம் தவறவில்லை. இன்று, ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கீழ் இருந்த நாடுகள் மட்டும் தம்மைச் சுரண்டிய அதே ஆட்சியாளர்களுடன் அவர்களின் தலைமையின் கீழ் பொதுநலவாய அமைப்பு என்கின்ற அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற விந்தை நிகழ்ந்திருக்கின்றது. இது முழுக்க முழுக்க தமது செல்வாக்கினை நிலைநிறுத்துவதற்கான ஆங்கிலேயரின் சாணக்கிய அரசியலின் வெற்றியாகும். காலனித்துவ நாடுகளைக்கொண்டிருந்த பிரான்ஸ் பெல்ஜியம் நெதர்லாந்து எவற்றுக்கும் இப்படி ஓர் அமைப்பினை உருவாக்க முடியவில்லையே. அவற்றின் கடூரமான ஆட்சி முறைகளினால், சுதந்திரம் பெற்ற பின்பு இன்றும் குறிப்பாக பெல்ஜியம் மற்றும் பிரான்சின் கீழ் இருந்த நாடுகள் (உம் கிழக்கு மேற்கு ஆபிரிக்க நாடுகள்) ஆங்கிலேயரின் கீழ் இருந்த நாடுகளைவிடவும் உள்நாட்டுப் போர்களினால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன. எனவே. இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்னும் கருத்தானது பல சிக்கல்கள் நிறைந்த அரசியல் மூலோபாயங்களை அதீதமாக எளிமைப்படுத்தும் சிறுபிள்ளை வாதமாகும். ஒரே கருத்தியலில் இயங்கினாலும்கூட, இராஜபக்ச நிர்வாகத்திற்கும் ரணில் மைத்ரி நிர்வாகத்திற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. இவற்றில் மக்கள் இயங்குவதற்கான வெளியினைக்கொடுக்கும் நிர்வாகம் எது எனத் தெரிவதே எம்முன்னால் உள்ள முதல் அவசியத் தேவையாகும். ஏனெனில், விழிப்புணர்வடைந்த மக்கள் பங்குகொள்ள முடியாத எந்தப் போராட்டமும் வெற்றியடைய முடியாது.

தென்பகுதியில் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் கடுமையான போட்டி நிகழும் சந்தர்ப்பத்தில், எவருக்கும் போடாதே எனக் கூறுவது உண்மையில் மகிந்த இராஜபக்சவை வெல்ல வைக்கும் உபாயமன்றி வேறில்லை. அதனை கிண்டிக் கேட்டால், அவர் ஆட்சியில் தொடர்ந்திருந்தால்தான் மேற்கு நாடுகள் இலங்கை மீது கவனத்தை வைத்திருக்கும் என்கின்றனர். தமிழ் மக்களின் சாபக்கேடான இந்தக் காத்திருப்பு அரசியல் ஒருபுறமிருக்க, இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் புலனாய்வு தகவல்களும் வழங்கி தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாகப் படுகொலை செய்வதற்கு உதவிய இந்நாடுகள்தாம் இனி எங்களைக் காப்பாற்ற வரப்போகின்ற ஆபத்பாந்தவர்கள் எனக்கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும். இராஜபக்ச சீனாவுடன் கொண்ட உறவினால் தமது நலன்கள் பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்ந்து அவருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்கிறார்கள். ரணில் மைத்ரி வந்தால் மேற்கு நாடுகளுடன் உறவு வளர்க்கப்படும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக சீனாவுடன் உறவு உடைக்கப்படும் என யார் சொன்னது? நாம் எல்லோரும் விரும்பியோ விரும்பாமலோ எமது அடுத்த பல தலைமுறைகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அளவுக்கு சீனாவிடம் கடன் பட்டிருக்கின்றோம். எந்த அரசாங்கம் வந்தாலும் அதனைக் கட்டியே தீரவேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழுமு; சீனா ஒரு முக்கிய பங்கு வகிக்கும். முள்ளிவாய்யக்காலில் நடந்த பேரழிவு தொடர்பான செய்மதிப் படங்கள் அத்தனையும் அமெரிக்காவின் கைவசம் இருக்கின்றன. சீனா அதன் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு முள்ளாகக் குற்றிக்கொண்டிருந்திருந்தால் இந்த சாட்சியங்களைப் பயன்படுத்தி இராஜபக்ச அரசினை கூண்டிலேற்றியிருக்கலாமே. யுத்தக் குற்ற விசாரணைகள் என்கின்ற சிம்ம முழக்கம் எதற்காக கடைசியில் கற்ற பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துதல் என்கின்ற பூனைக்குட்டியின் மியாவ் கத்தலாக ஐ.நா சபையில் பிரேரணையாக அரங்கேறியது என்பதைச் சிந்திக்க வேண்டும். வேண்டும்போது சிறு அழுத்தங்களை மேற்கொள்ளுவதும்,அரசாங்கம் இளகி வந்தால் அதனைத் தளர்த்துவதுமான போக்கு கொண்ட சர்வதேச அரசியலின் மீது நாம் தங்கி நிற்கும் அரசியலை மேற்கொள்ளுவது கொஞ்சமும் விவேகமற்ற செயலாகும்.

இப்பொழுது நடக்கும் விசாரணையானது ஐ.நா வின் மனித உரிமைகள் சபையின் பிரேரணையின் பேரில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடுகளை ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஆராயும் விசாரணையாகும். மகிந்த இராஜபக்ச ஆட்சியில் இருந்தாலென்ன இருக்காது போனால் என்ன, ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தொடரும். இவ் விசாரணையின் முடிவில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தனது சிபாரிசுகளுடனான அறிக்கையினை ஐ.நா மனித உரிமைகள் சபைக்குக் கையளிக்கும். அது விவாதத்துக்குள்ளாகி காத்திரமான தீர்மானங்களை எட்டுவது அச்சபையின் அங்கத்துவ நாடுகளினது நிலைப்பாடுகளிலும் அவற்றின் மத்தியில் இரு தரப்பாரும் முடுக்கி விடும் பிரசாரத்திலும் தங்கியிருக்கின்றது. இலங்கைக்குள் புக விடாமல் விசாரணைகள் நடத்தப்படுவதால் அதில் சாட்சியங்கள் போதாதெனவும் அது நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு. இந்த முறைவழி தமிழ் மக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்படுகின்றது என வைத்துக்கொள்வோம். பாரிய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன என காணப்பட்டால் மனித உரிமைகள் சபையானது இவ்வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும் வகையில் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அனுப்பி வைக்கும். இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தக்கு ஒப்புதலளிக்காத நாடு என்பதனால் இதன் வழக்கு அந்நீதிமன்றிற்குச் செல்லும் ஒரே வழி பாதுகாப்புச் சபையேயாகும். பாதுகாப்புச் சபையிலோ மகிந்த அரசாங்கத்தின் இரு நெருங்கிய நட்பு நாடுகளான ர~;யாவும் சீனாவும் இருக்கின்றன. அவை இவ்வழக்கினை சர்வதேச நீதிமன்றிற்கு அனுப்ப ஒத்துழைக்க மாட்டா. அவ்வாறு அவை தற்செயலாக ஒத்துழைத்து அனுப்பினாலும்கூட, நீதிமன்றம் விசாரணையை முடுக்கி விடவேண்டும். அது மகிந்தவைக் குற்றவாளியாகக் கண்டால் அவருக்குப் பிடியாணை பிறப்பிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது. இதே முறைவழி சூடானின் ஜனாதிபதி ஓமார் அல்ப~Pருக்கு நிகழ்த்தப்பட்டது. அவருக்கெதிராகப் பிடியாணை பிறப்பித்து இன்று ஐந்து வருடங்களாகி விட்டது. அவர் இன்னும் கைதாகவில்லை. இவரை வழிக்குக் கொண்டு வருவதற்கு பாதுகாப்புச் சபையினதும் ஐ.நாவினதும் ஒத்துழைப்பு போதவில்லை என்கின்ற காரணத்தினால் சர்வதேச நீதிமன்றின் சட்டத்தரணிகள் பயனற்ற இவ்வழக்கை முடித்துக்கொள்ளக் கேட்டிருக்கின்றார்களாம்.

எது எப்படியிருப்பினும் இந்த விசாரணை குற்றவாளிகளை இனம் காணுமே தவிர தமிழ் மக்களுக்குத் தீர்வு எதனையும் கொண்டு வராது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை நம்பியா மகிந்தவைத் திரும்ப ஆட்சியில் அமர்த்தக் கேட்கின்றனர்? இனப்பிரச்சினைக்குத் தங்குதிறன் மிக்க தீர்வானது இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் இணைந்து தமிழ் முஸ்லிம் மக்கள் செயற்படுத்த வேண்டியதாகும். அதற்கு வேறு குறுக்கு வழிகள் கிடையாது. இந்த ஆட்சி துரிதமாக செயற்படும் விதத்தை ஒப்பு நோக்கினால் இன்னொரு தடவை இதற்கு வாய்ப்புக் கொடுத்தால் தமிழ் மக்களுடைய நிலங்கள் நிரந்தரமாகப் பறிக்கப்பட்டு அவர்களுடைய கூட்டான இருப்பும் அழிக்கப்படும் என்பது தெரிகிறது. அதற்கு இந்த ஆட்சியில் அப்பீலே கிடையாது. திரும்ப ஆட்சியில் அமரும் மகிந்த இந்தத் தேர்தல் கொடுத்த பாடங்களுடன் இனி ஒரு தேர்தலையும் நடத்தவே மாட்டார் என்றுதான் கூறவேண்டும். ஏதாவதொரு சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் அங்கிங்கெனாதபடி எங்கும் தனது அடியாட்களை அமர்த்தி வேறெவரையும் தலைதூக்காவண்ணம் ஆட்சி செய்வார். எகிப்தின் முபாரக் போன்ற தலைவர்கள் போல ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் போராட்டம் வெடிக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும். நாங்கள் இதற்கு எதிராகக் குழறினால், 2005ற்குப் பின்பு கூறியது போலவே, நீங்கள்தானே இதனை ஆட்சிபீடம் ஏற்ற உதவினீர்கள் என சர்வதேச சமூகம் எம்மைத் திருப்பிக் கேட்கும். 2005ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் புரிந்த அதே தவறினை மீண்டும் தமிழ் மக்களை செய்யச்சொல்லிக் கோருகின்றனர்.

மைத்ரி ஆட்சி தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வினைத் தரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மைத்ரி ஆட்சி மக்கள் இயங்குவதற்கான ஜனநாயக வெளியொன்றினைக் கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இது தமிழ் மக்களின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு மிகவும் அவசியமான சூழ்நிலையாகும்.