ஐ.நா நிபுணரின் அறிக்கையும் மக்கள் போராட்டங்களும்
நரேன்-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 வது ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. கால அவகாசம் வழங்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஐ.நாவின் நிலைமாறுகால நீதிக்கான விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் இரண்டு வார கால பயணம் மேற்கொண்டு இலங்கை விஜயம் செய்திருந்தார். ஏனைய நிபுணர்களைப் போல் அன்றி இவர் இந்த நாட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை சரியாக படம் பிடித்து சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து தனது அவதானிப்புக்களையும் வெளிப்படுத்தி இருந்தார். அரசாங்கத்தின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முதல் தங்களது கோரிக்கைளை முன்வைத்து போராடி வரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வரை தேசிய இனப்பிரச்சனையுடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசி இருந்தார். அவருடைய பார்வையானது மிகவும் ஆழமாகவும், பரந்துபட்ட அளவிலும் அமைந்திருந்ததை அவரது ஊடக அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.
நிலைமாறு கால நீதிப் பொறிமுறையானது ஒரு தரப்பை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி மறு தரப்பின் தவறுகளை நியாப்படுத்துவது அல்ல என்பதையும், அந்த பொறிமுறையானது மனித உரிமைகள் சார்ந்தது மட்டுமன்றி அடிப்படை உரிமை சார்ந்தது என்றும் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் கூற்றான படைத்தரப்பினரை ஒரு போதும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற மாட்டோம் என்னும் கூற்றை கடுமையாக விமர்சித்து இருந்ததுடன், இது நாட்டின் நீதித்துறையின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும் எச்சரித்து இருந்தார். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் அலுவலகத்தை கொழும்பில் மட்டும் நிர்மாணிப்பது மற்றும் தாங்கள் விரும்பிய பணிப்பாளர் சபையை மட்டும் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன், உண்மை- நீதி- நட்டஈடு- மீள் நிகழாமை என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நேர அட்டவணையுடன் கூடிய பொறிமுறையை முன்வைக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார். உயிரிழந்தவரை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் எனவும், பயங்கரவாதத்தை தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், வடக்கு – கிழக்கில் இராணுவத்தை குறைக்க வேண்டும் எனவும், காணி விடுவிப்பை விரைவுபடுத்த வேண்டும் எனவும், நட்டஈடு வழங்குவதற்கான திட்டம் அவசியம் எனவும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தி இருக்கின்றார். இலங்கை நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக் கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீநியை நிலைநாட்டவிடின் சர்வதேச மட்டத்தில் நீதியை தேடுவதற்கான முயற்சிகள் மிகவும் வலுவான முறையில் இடம்பெறும் எனவும் அவர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்து இருக்கின்றார். ஐ.நா நிபுணரின் இத்தகைய அழுத்தத்திற்கு தமிழ் மக்களது தொடர்ச்சியான ஜனநாயக ரீதியான போராட்டங்களே வலுச்சேர்த்து இருக்கின்றன.
யுத்தம் முடிவடைந்து எட்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. போரை மௌனிக்கச் செய்த கடந்த மஹிந்த அரசாங்கம் போர் வெற்றிவாதத்தில் மிதந்ததுடன், தமிழ் தேசிய இனத்திற்கு எதிரான அடக்கு முறைகளை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தது. தமிழ் மக்கள் நீதிகேட்டும், தமது உரிமைக்காகவும் வீதியில் இறங்கி போராடுவதற்கு கூட அஞ்சும் நிலை ஏற்பட்டடிருந்தது. ஆனால் 2015 ஜனவரி 8 ஆம் திகதி சர்வதேச நாடுகளின் ஆதரவுடன், தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் வாக்குப்பலத்துடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பார் என்கின்ற ஒரு மனநிலை தமிழ் மக்களிடம் இருந்தது. சர்வதேச சமூகம் ஆட்சி மாற்றத்திற்காக மேற்கொண்ட காத்திரமான நடவடிக்கைகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து ஆட்சி மாற்றத்திற்காக உழைத்திருந்தமையும் அந்த நம்பிக்கையை தமிழ் மக்களிடத்தில் வலுப்படுத்தியிருந்தது. ஆனாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அவர்களது அபிலாசைகளையோ, கோரிக்கைகளையோ இந்த அரசாங்கம் தீர்த்து வைக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கூட உளப்பூர்வமாக செயற்படவில்லை. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி தமது அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்தும், நீதி கோரியும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைமை தமிழ் மக்களது கோரிக்கைள் மற்றும் அபிலாசைகள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு காத்திரமான அழுத்தத்தை கொடுத்ததாக தெரியவில்லை. தம்மை சந்திக்க வருகின்ற இராஜதந்திரிகளிடம் கூட இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்ததாகவோ அல்லது மக்களது கோரிக்கைகள் குறித்து கடுமையான அழுத்தங்களை கொடுத்ததாகவோ தெரியவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருந்த அழுத்தங்களில் இருந்து பிணை எடுக்கும் வகையில் செயற்பட்டு ஐ.நாவில் காலஅவகாசம் வழங்குவதற்கும் காரணமாக செயற்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே, தமிழ் மக்கள் தாமாகவே ஜனநாயக ரீதியாக போராட வேண்டிய நிலை ஏற்டபட்டது. எந்தவித அரசியல் பின்புலங்களும் இன்றி மக்கள் நீதி கேட்டு கடந்த 9 மாதங்களாக வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இத்தகைய போராட்டங்கள் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திற்கும், அவர்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்களும் பெரும் தலையிடியைக் கொடுத்திருக்கின்றது. இதன் காரணமாகவே இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வப்போது சர்வதேச அழுத்தம் ஏற்பட்டும் வருகின்றது. இந்த நிலையிலேயே ஐ.நா விசேட நிபுணரின் அறிக்கையும் அமைந்திருக்கின்றது.
ஒரு தேசம் சிந்திக்க முற்பட்டால் அதன் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது பிரான்சியப் புரட்சியின் சிந்தனையாளர் ஒருவர் மக்களை புரட்சியில் ஈடுபடுத்துவதற்காக முன்வைத்த கருத்து. ரூசோ, வோல்ரயர், மொன்டஸ்கியூ போன்ற சிந்தனையாளர்கள் வெளியிட்ட கருத்துக்களே பிரான்சியப் புரட்சியை ஒரு வெற்றிகரமான புரட்சியாக்கியது. மக்கள் விரும்பிய ஒரு ஆட்சியை உருவாக்கி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை அந்த நாட்டு மக்களுக்கு பாராபட்டசம் அற்ற முறையில் பெற்றுக் கெடுத்தது. அத்தகையதொரு மக்கள் எழுச்சியின் அவசியமே தற்போது வடக்கு, கிழக்கிலும் உணரப்பட்டுள்ளது. தாம் வாக்களித்த தலைமைகள் தமது கதிரைகளைப் பற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்க, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் இன்று கொசுத் தொல்லை, மழை, வெயில் எனப்பாராது இரவு பகலாக வீதிகளில் குந்தியிருந்து போராடும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இத்தகைய மக்கள் போராட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் மன்சாட்சியையோ அல்லது தமிழ் தலைமைகளின் மனச்சாட்சியையோ உறுத்தாது விடினும், சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிகளை உறுத்தியிருக்கின்றது. அதனால் அத்தகைய போராட்ட களத்தில் உள்ள மக்களை சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளும், ஐ.நா நிபுணர்களும் சந்தித்து வருவதுடன், அவர்களது கோரிக்கைகள் தொடர்பிலும் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன…..? என நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் 9 ஆம் மாதத்தை நோக்கி நகர்ந்து விட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 7 ஆயிரம் கடிதங்களுக்கும் இன்று வரை பதில் வழங்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம், போராட்ட களத்தில் உள்ள மக்களை ஆறுதல்படுத்தவோ அல்லது அந்த மக்களது போராட்டங்களை முடித்து வைக்கவோ காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுக்காது, காலத்தை கடத்தி, மக்களை ஆசுவாசப்படுத்தும் செயற்பாடுகளில் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்த முயல்வதாகவே தெரிகிறது. அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்து மீண்டும் பேசுவதற்கு கொழும்புக்கு அழைத்திருந்தமையும், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்களும் இதனையே வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஐ.நா விசேட நிபுணர் இந்த விடயம் குறித்து பொறுப்புக் கூறலை மீள வலியுறுத்தியுள்ளார்.
இதுதவிர, காணி விடுவிப்பு கோரியும் இரணைதீவு மக்கள், கேப்பாபுலவு மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் அத்தகைய மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அரசாங்கம் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த மக்களது போராட்டமானது இராணுவ குறைப்பின் அவசியத்தையும், நில சுவீகரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுவதையும் வெளிப்படுத்தியுள்ளதுடன், அரசின் நல்லெண்ண செயற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கின்றது. இத்தகைய பின்னனியிலேயே, காணி விடுவிப்பைத் துரிதப்படுத்துமாறும், காணி விடுவிப்பு தொடர்பில் காலஅவகாசத்துடன் கூடிய அட்டவணை ஒன்றை தயாரிக்குமாறும் ஐ.நா விசேட நிபுணர் அரசாங்கத்தை வலியுறுத்தி இருக்கின்றார்.
கடந்த 8 வருடங்களாக அனுராதபுரம் சிறையச்சாலையில் தடுத்து வைகப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதிகள் மூவரினது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றில் 58 அமர்வுகளாக நடைபெற்ற நிலையில், தற்போது அந்த வழக்குளை அனுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ் அரசியல் கைதிகள் மூவரும் கடந்த ஒரு மாதகாலமாக தமது உரிமைக்காக நீதியான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளும், இவர்களுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். இவ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மட்டுமன்றி பல பிரதேசங்களிலும் மனித உரிமைச் செயற்பாட்டளர்களும், அரசியல் கைதிகளின் விடுதலையுடன் தொடர்புபட்ட அமைப்புக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் வெகுஜனப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். ஐ.நா விசேட நிபுணர் வடக்கிற்கு சென்ற போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கதவடைப்பு போராட்டம் ஒன்றும் நடைபெற்று இருந்தது. இது ஐநா நிபுணரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது. இதன் வெளிப்பாடாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க கோரியும், அரசியல் கைதிகள் தொடர்பிலும் ஐ.நா நிபுணர் தனது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகள் அரசிற்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாது விட்டாலும், பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வதேச ரீதியிலும் இலங்கை விவகாரம் உயிர்ப்புடன் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கும், இந்த நாட்டில் சம நீதியைப் பெறுவதற்கும், தொடர்ந்தும் வெகுஜனப் போராட்டங்களை உயிர்ப்புடனும், வினைத்திறனுடனும் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையே அரசியல் கள நிலமைகள் உணர்த்தி நிற்கின்றது.
N5

