செய்திகள்

நிலமட்டம் தாழிறங்கல் காலநிலை மாற்றங்களினால் உருவாகும் புதிய மானிட அவலம்

மருத்துவர் சி ஐமுனாநந்தா
அண்மையில் புவியியல் பொறியியலாளர்களால் ஆராயப்பட்ட செய்மதித் தரவுகளில் இருந்து சீனாவில் உள்ள 82 நகரங்களில் 45% பகுதிக்குள் நிலத்தினுள் அமிழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இந் நகரங்களின் நிலங்கள் ஆண்டுக்குச் சராசரியாக 10 மில்லிமீற்றர் என்ற அடிப்படையில் நிலத்திற்குள் இறங்குகின்றன. இதற்கு பிரதான காரணங்களாக பூகோள வெப்பமாதலால் ஏற்படுகின்ற கடல்மட்ட அதிகரிப்பும் நவீன மயப்படுத்தப்படும் சூழல் தொகுதியும் அமைகின்றன. தற்போதய வேகத்தில் கடல்மட்டம் அதிகரிக்குமாயின் இதன் பாதிப்பு இன்னும் 100 வருடங்களில் மூன்று மடங்காக அதிகரிக்கும். அதாவது கடல்மட்ட உயர்வு 2120ம் ஆண்டளவில் இன்னும் 0.87 மீற்றர்களாக அமையும். இதனால் கரையோரநிலங்கள் தற்போதய 6மூ பாதிப்பில் இருந்து 26மூ பாதிப்பாக அதிகரிக்கும்.

நிலமட்டம் தாழிறங்குவதற்கு உரிய காரணங்களாக நிலத்தடி நீர் மட்டம் அமுக்கத்திற்கும் நிலத்தின் மண்கட்டமைப்பின் பௌதீகவலிமைக்கும் இடையிலான சமனிலை சீர்குலைவதே காரணமாக அமைகிறது.

நிலக்கீழ் நீரினை மிகையாக மனிதப்பாவனைக்கு எடுத்தல், நிலத்தில் கனிமங்கள், எண்ணெய்வளங்கள் என்பவற்றை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக அகழ்ந்து எடுத்தல், நிலத்தினுள் அதிக அளவில் சேதனப்படிவுகள் உருவாகுதல், நிலத்தினுள் சேதனக் கழிவுகளைப் பாய்ச்சுதல் என்பன ஒரு பிரதேசத்தின் புவியியல் தாழிறங்கலிற்கு துரித காரணிகளாக அமையும். இவற்றிக்கு மேலாக துருவ பனிக்கட்டி உருகல் அதிகரிப்பு, புவி உள்ளோட்டுத் தகடுகளின் நகர்வுகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

நிலம் தாழிறங்கல் என்பது எமது உலகம் எதிர்கொள்கின்ற சூழலியல் சவால் ஆகும். இதனால் பாரிய மனிதநேய நெருக்கடிகள் ஏற்படலாம்.

எனவே நிலம் தாழிறங்கல் பற்றிய விழிப்பு அனைத்து மக்களுக்கும் அவசியம். அடுத்து கட்டடத்துறையில் நிர்மாணப்பணிபுரிவோர், நகரவடிவமைப்போர், சுரங்கப்பணிபுரிவோர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் இது தொடர்பான பரிமாணத்தை ஆராய்தல் வேண்டும். மேலும் சமூக உளவியல் பொருளாதார நோக்கில் சிந்திக்கவேண்டிய கடமையும் உள்ளது.

நிலமட்டம் தாழிறங்கல் பூகோளப்பிரச்சனையாக பரிணமித்ததாலும் அது ஒவ்வொரு நாட்டிற்கும் மேலும் ஒவ்வொரு நாட்டின் பிராந்தியங்களுக்கும் பிராந்திய ரீதியான பிரச்சனையாகவும் அமைகிறது. அந்தவகையில் இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலக்கீழ் தரையின் புவியியல் கட்டமைப்பும் மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வரையிலான தரையின் புவியியல் கட்டமைப்பும் சுண்ணாம்புக் கற்பாறைகளின் மேல் அமைந்து உள்ளன.

சீனாவில் இன்று நிகழும் நிலமட்டத்தாழிறங்கல் அனர்த்தத்தினை உற்று நோக்கி எமது பிரதேசத்திலும் இது போன்ற அவலம் ஏற்படாது இருப்பதற்கு உரிய திட்டங்கள் மிகவும் அவசியம்.

இவற்றுள் முக்கியமானது அவ் நிலத்தில் இருந்து நிலத்தடி நீரினை அபரிவிதமாக பாவனைக்கு எடுத்தல் மட்டுப்படுத்தப்படல் வேண்டும். சுண்ணம்புக்கல் பாறைகளுக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களின் கனதி குறைக்கப்படல் வேண்டும். குறிப்பாக பாரிய கட்டடங்களைக் கட்டும்போது நிலக்கீழ் சுண்ணம்புக் கற்பாறைகளில் ஏற்படும் அழுத்தம் அருகில் உள்ள நிலங்கள் தாழிறங்கக் காரணமாக அமையும். அதேபோல் அதிக அளவில் குழாய்க்கிணறுகள் அமைப்பதும் நிலம் தாழிறங்கவும் கடல் காவு கொள்ளவும் காரணமாக அமையும். அடுத்து எமது பிரதேசத்தில் பாரிய அளவில் சுண்ணக்கற்கள் அகழ்வதைத் தடைசெய்தல் வேண்டும். கட்டடங்களை நிர்மாணிப்பதையும் வீதிகள், வடிகால்கள் அமைப்பதனையும் எமது பிரதேச மண்ணியலுக்கு ஏற்றதாகச் சிந்திக்க வேண்டும்.