செய்திகள்

ஜனாதிபதியின் வடக்கு விஜயமும் நீதி கோரிய கறுப்புக்கொடி போராட்டமும்

ருத்திரன்-

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அரசியல் கைதிகள் பல தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சிறைச்சாலைகளுக்கு வெளியிலும் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், அரசியல் கைதிகள் விவகாரம் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தமது வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 8 வருடங்களதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உடல், உள ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய உணவு ஒறுப்பு போராட்டமும் அவர்களின் உடல்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த நிலையிலேயே வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்களின் தன்னெழுச்சியுடன் கூடிய ஜனநாயக ரீதியான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. யாழ் பல்கலைக்கழக சமூகமும் அரசியல் கைதிகளுக்காக ஜனநாயக போராட்டங்களில் இறங்கியுள்ளனர். மைத்திரி – ரணில் அரசாங்கம் மீதும், அந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீதும் அதிருப்தி கொண்டர்வர்களாக பொது அமைப்புக்களும், பல்கலைக்கழக சமூகமும், மக்களும் தாமாகவே வீதியில் இறங்கி போராட முன்வந்துள்ளனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வடக்கிற்கான விஜயம் அமைந்திருந்தது.

யாழ் இந்துக் கல்லூரியில் கடந்த வாரம் சனிக்கிழமை தேசிய தமிழ் தின விழாவும், பாடசாலைகளின் காலசார விழாவும் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டதுடன், அச்சுவேலி- நிலாவரைப் பகுதியில் விவசாய உற்பத்திகளை அதிரிப்பது தொடர்பில் மத்திய- மாகாண விவசாய அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார். அதன் பின் கிளிநொசிசிக்கு சென்று அங்கு நிறுவப்பட்டிருந்த பொருளாதார மத்திய நிலையத்தையும் திறந்து வைத்தார். கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடனும் சந்திப்பை மேற்கொண்டார். ஜனாதிபதி வடக்கிற்கு வரவுள்ளார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்து அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைக்கு பதில் இல்லாவிடின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பூரண கதவடைப்பு போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போதே தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வடக்கில் பூரண கதவடைப்பு போராட்டமும் இடம்பெற்றிருந்தது. தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈழம்மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்), புதிய மாக்சிச லெனின் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், பொது அமைப்புக்களும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் அமைப்புக்களும் என 20 இற்கும் மேற்பட்ட அமைப்புக்களின் இணைந்து இந்த பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து ஒருமித்த குரலாய் அரசியல் கைதிகளுக்காக தடைகளை தகர்த்து முழுமையான ஆதரவை வழங்கியமையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விரும்பியோ, விரும்பாமலோ பூரண கதவடைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

imageproxy (1)இந்த பூரண கதவடைப்புக்கு அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும், தமிழ் தலைமைகளுக்கும் ஒருமித்த குரலாய் அரசியல் கைதிகளின் விடுதலையின் அவசியத்pதை வலியுறுத்தியிருந்தனர். கதவடைப்பு போராட்டம் நடைபெற்ற தினத்தில் யாழில் ஆளுனர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு ஏ9 வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஒரு ஆர்ப்பாட்டமும், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அரசியல் கைதிகளுக்காக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமும், சில பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடும் இடம்பெற்றிருந்தது. ஆனாலும் அரசாங்கம் குறித்த போராட்டங்கள் தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை. மக்களின் மனங்களை புரிந்து கொள்ளவில்லை. இதனால் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

ஜனாதிபதி யாழ் இந்து கல்லூரிக்கு வந்த போது கே.கே.எஸ் வீதியில் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், அவர்களது ஆதரவாளர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அவர்களது விடுதலையை வலியுறுத்தும் அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ் வீதி வழியாக வாகனத்தில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன வந்த போது அவர்கள் ‘மைத்திரியே வெளியேறு, அரசியல் கைதிகளுக்கு தீர்வைத் தா’ என கோசமிட்டு கறுப்புக் கொடிகளை காட்டினர். இதன்போது தனது வாகனத்தை நிறுத்தி, வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற மைத்திரி தனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்தார். இது அவரது துணிச்சலையும், அவரது அரசியல் சாணக்கியத்தையும் வெளிப்படுத்துகின்றது என்பது உண்மையே. ஆனாலும், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீர்வு கிடைக்காமையால் மைத்திரிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என்பது முன்னரே தெரியவந்திருந்தது. இதனை ஜனாதிபதி நாட்டின் புலனாய்வுத்துறை ஊடாகவும், அரசியல் பிரமுகர்கள் ஊடாகவும் முன்னேரே அறிந்தும் இருந்தார். வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வடமாகாண ஆளுனர் அவர்களிடமும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவது தொடர்பில் முன்னரே தெரிவித்தும் இருந்தார். இருப்பினும் எதுவுமே தெரியாதவர் போல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சந்தித்து அனைவரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் செயற்பட்டிருந்தார். இதன் மூலம் போராடும் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதான ஒரு தோற்றப்பாட்டை அவர் சர்வதேச சமூகத்திற்கும் காட்டியுள்ளார்.

22366628_692795760926869_696635475753293724_nதமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை ஜனாதிபதி பேச அழைத்த போதும் அவர் செல்லவில்லை. இது குறித்து அக் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் விடயம் ஜனாதிபதிக்கு தெரிந்த விடயம். அதை அவர் செய்ய தவறியுள்ள நிலையில் அவருடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. சர்தேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அவர் அந்த இடத்தில் இறங்கி வந்தார். போராட்டத்தில் ஈடுகின்ற தரப்புக்களுக்கு ஜனநாயக உரிமையை கொடுத்துள்ளதுடன், அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன் என்ற தோற்றப்பாட்டை காட்டவும், தமிழ் மக்களை ஏமாற்றவும் அவர் முற்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக சமூகமும், அரசியல் கைதிகளின் உறவினர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்து பேசியிருந்தனர். அந்த சந்திப்பில் தமக்கு திருப்தியில்லை என பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளதுடன், அரசியல் கைதிகளின் உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, நீதியமைச்சரும், சட்டமா அதிபரும் நாட்டில் இல்லை. அவர்கள் வந்ததும் கதைத்து நல்லதொரு முடிவை தெரிவிக்கின்றேன் எனக் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் அரசியல் கைதிகள் விவகாரம் பேசப்பட்ட நிலையில், இந்தச் சந்திப்பை காரணம் காட்டி பதில் அளிக்கும் விடயத்தில் இருந்து அரசாங்கம் நழுவியுள்ளது. ஆக, ஜனாதிபதியுடனான சந்திப்பு என்பது வெறும் கண்துடைப்பாவே இருந்திருக்கின்றது. இதன் மூலம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அரசியல் கைதிகள் தொடர் போராட்டதால் உடல், உள பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்து கொண்டு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை விடுத்து ஆக்கபூர்வமாக செயற்பட முன்வரவேண்டும்.

22549489_692795774260201_3754656548575127060_nஇந்துக்கல்லூரியில் உரையாற்றிய ஜனாதிபதி, நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போது எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். நான் எனது வாகனத்தை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று அவர்களின் பிரச்சனையைக் கேட்டேன். அவர்கள் தமது கோரிக்கையை என்னிடம் கூறினார்கள். அதன் போது நான் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தேன். அவர்கள் அதற்கு வர தயாராக இல்லை. தமது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள் என என்னிடம் கோருகின்றார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும், பேசித்தான் தீர்க்க முடியும். வன்முறையால் தீர்க்க முடியாது. இங்கு கறுப்புக் கொடி உயர்த்த தேவையில்லை. சமாதானத்திற்காக வெள்ளைக் கொடிகளே உயர்த்தப்பட வேண்டும் என்றார். அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்னகவே வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையிலும், எதிர்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பிய நிலையிலும் உரிய தீர்வுகள் எட்டப்படாமையே இந்தப் போராட்டத்திற்கு காரணம். ஆகவே, பேச்சுவார்த்தை புதிதாக நடந்துவதற்கு இந்த விடயத்தில் எதுவும் இல்லை. ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளையும், பேச்சுவார்த்தையில் கூறிய விடயங்களையும் நிறைவேற்றினால் போதுமானது. ஆக பேச்சுவார்த்தைக்கு அழைத்தமையானது சர்வதேசத்தை கவரும் ஒரு செயற்பாடாகவே பார்க்க முடிகிறது. இதனையே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பல்கலை மாணவர்களுடனான சந்திப்பும் வெளிப்படுத்தியிருக்கிறது.

அத்துடன் கறுப்புக் கொடிகளுக்கு பதிலாக வெள்ளைக் கொடிகளை ஏந்துமாறும் கோரியிருக்கின்றார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் பேரவலத்தின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள், பொது மக்களுக்கு நடந்தததை தமிழ் தேசிய இனம் இன்னும் மறந்து விடவில்லை. அப்போது பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் தற்போதைய ஜனாதிபதி இருந்திருந்தார். அது குறித்து இன்று வரை ஒரு நீதி கிடைக்காத நிலையில் மீண்டும் வெள்ளைக் கொடி மேல் எவ்வாறான ஒரு நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும். தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் தேசிய இனம் வெள்ளைக் கொடி ஏந்திய போதும், கறுப்பு கொடி ஏந்திய போதும் ஒரே விதமாகவே பார்த்திருக்கின்றது. இதுவே கடந்த கால வரலாறு. அதில் இருந்து மைத்திரியின் மனநிலை மாறிவிட்டது என்று கருதக் கூடிய வகையில் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எதையும் உளப்பூர்வமாக செய்யவில்லை.

22366745_692795924260186_5779677801516180447_nகிளிநொச்சிக்கு சென்ற ஜனாதிபதி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து ‘உங்களை பேசுவதற்கு கொழும்பு அழைத்துச் செல்கின்றேன். வாகன வசதியும், பாதுகாப்பும் தருகின்றேன். இரகசிய முகாம்களில் காணாமல் போனவர்களை தேடுங்கள் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 8 வருடங்காள அந்த மக்கள் போராடி வரும் நிலையில் ஜனாதிபதியை முன்னரும் பலதடவை சந்தித்து பேசியிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரால் ஜனாதிபதிக்கு 7000 இற்கும் மேற்பட்ட கடிதங்களும் நீதி கோரி அனுப்ப்பட்டது. அது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்காது, மீண்டும் கொழும்புக்கு பேச அழைப்பது என்பதும், மக்களையே தேடச் சொல்வது என்பதும் வெறும் காலம் கடத்தும் செயற்பாடே. மக்களை அழைத்து பேசி காலத்தை இழுதடிக்கவும், நீண்டு கொண்டிருக்கும் போராட்டங்களை தீர்வு இன்றி முடிவுக்கு கொண்டு வரவும் புதிய உத்தியை அரசாங்கம் கையாள முனைவதாகவே தெரிகிறது.

இந்த நாட்டில் இனப்பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்தமைக்கு தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களே காரணம். அவர்கள் தமிழ் தேசிய இனத்தை அடக்குவதிலும், ஒடுக்குவதில் கவனம் செலுத்தியதுடன் அவர்களது நியாயமான கோரிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையும் காணப்பட்டது. தமிழ் மக்களின் ஆதரவுடன் உருவாகிய மைத்திரி- ரணில் கூட்டரசாங்கம் கூட தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இது தமிழ் மக்களின் மனங்களில் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் விரக்தி நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றாகிய தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து உண்மையான மனச்சாட்சியுடனும், இதய சுத்தியுடனும் தமிழ் மக்களின் பிரச்சனை அணுகுவதற்கு தென்னிலங்கை முன்வர வேண்டும். அதுவே இந்த நாட்டில் வெள்ளைப் புறாக்கள் பறப்பதற்கான சூழலை உருவாக்கும். அதன் மூலமே கறுப்புக் கொடிகளை ஏந்தும் தமிழ் மக்களின் கையில், அவர்களின் விருப்பத்துடன் சிங்கக் கொடிகளை ஏந்த வைக்க முடியும்.

N5