செய்திகள்

உடைகிறது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது.
தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனிடையே ஜனநாயக தமிழரசுக்கட்சிக்கு ஆட்களை இணைக்கும் நடவடிக்கையில் அவர்கள் தீவிரம் காட்டிச் செயற்பட்டுவருவதாகவும் தெரியவந்திருக்கிறது. இந்தக் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் அவர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழரசுக்கட்சியின் தலைமைப்பீடத்துக்கும் அருந்தவபாலன் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அருந்தவபாலன் அவர்கள் விரைவில் பதவியேற்பார் என நம்பப்படுகிறது. அதற்குப் பிரதி பலனாக உள்ளுராட்சித் தேர்தலில் கேசவன் சயந்தனின் நடவடிக்கைகளில் தலையிடாமல் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவும் ஆபிரகாம் சுமந்திரன் போன்றவர்களின் கொள்கை முடிவுகளை விமர்சிக்காமல் அமைதிகாப்பதற்கும் அருந்தவபாலன் அவர்கள் இணங்கியுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருந்த சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சி வெளியேறி, ஏற்கனவே வெளியேறியுள்ள தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்வதாக அறிவிப்பு விடுத்திருந்மை தெரிந்ததே. இருப்பினும் ஈபிஆர்எல்எப் வரதர் அணியினரை கூட்டமைப்பின் உள்ளே கொண்டுவருவதற்கான முயற்சியும் தமிழரசுக்கட்சியினரால் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)