மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!
இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது



