Search
Tuesday 20 October 2020
 • :
 • :
தலைப்பு செய்திகள்

நெஞ்சே எழு  7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…

நெஞ்சே எழு  7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )

உன்னால் முடியும் என்ற வார்த்தைகள் புறத்தில் இருந்து புறப்படுவதால்த்தான் அகத்திற்குள் அது கருத்தரிக்கின்றது. மனித மனதுக்கு எப்போதும் ஒரு தூண்டி தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. கஜினி முஹமதுக்கு சிலந்தியாகவும், உலகின் கதாநாயகனான சேகுவாராவுக்கு அது மோட்டார்சைக்கிள் பயணமாகவும் இருந்தது போல சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தூண்டி தேவைப்படுகின்றது. இந்த தூண்டல்களே மெல்ல மெல்ல இலட்சிய விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுகின்றன, உரம் சேர்க்கின்றன…

சரி.. தூண்டல் பலமாக வெளியே உள்ள காரணத்தால் எல்லா மனங்களும் வைராக்கியப்படுகின்றனவா? என்றகேள்வி ஒவ்வொருக்குள்ளேயேயும் தட்டிக்கேட்காமல் இல்லை. நிச்சயமாக வெளித்தூண்டல்களை ஏற்று தனக்குள்ளேயான சுய தூண்டல்களினூடாக தன்னை தொடர்ந்து மெருகேற்றும் மனமே சாதனை என்ற எல்லைக்கோடுகளை எட்டித்தொடக்கூடியதாக உள்ளது.

‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை’ என்ற பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டிருப்பீர்கள்… அதில் மனிதன் எப்படி மாறினான் என்பதை கவிஞர் அழகாக கூறியிருப்பர்…

‘பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்’
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எனவே ஒவ்வொரு தூண்டல்களுமே, ஒவ்வொரு தேடல்களை உருவாக்கி, அதுவே ஒவ்வொரு படைப்பிற்கும் காரணமாகியது என்பது திண்ணம். நவீன காலத்தில் இந்த தூண்டல்கள் அல்லது வலுவூட்டல்கள் (Motivation) என்பது இன்றைய உலகில் ஒவ்வொரு துறைக்கும் இன்றியமையாத ஒன்று என்று அத்தியாயப்படுத்திக்கொண்டுள்ளது. மனம் உள்ளேயும், புறத்திலும் எதை நிச்சயம் அடைவேன் என்று இலட்சியப்படுத்திக்கொள்கிறதோ அதை நிச்சயம் அடைந்தே தீரும். இதுவே பிரபஞ்ச சத்தியம். எல்லா மதங்களும் எல்லாஇலக்கியங்களும் இதை மறுக்காமல் உண்மையென்றே கூறுகின்றன.

Lion

‘எனக்கொரு கனவு உண்டு. ஒரு நாள் அடிமைகளாக பண்ணைகளில் வேலை செய்யும் கறுப்பின கூலித்தொழிலாளியின் மகனும், நிலப்பிரபுவின் மகனும் ஒன்றாக அமர்ந்திருந்து தமது இராக்கால உணவை அருந்துவார்கள், எனக்கொரு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு இன்று இது அசாத்தியமாக இருக்கலாம் ஆனால் என்றோ ஒருநாள் அமெரிக்கதேசத்தின் செனட் சபையின் ஒரு அங்கத்துவராக கறுப்பினத்தவர் ஒருவர் கால்பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..’ என்று நம்பிக்கையுடன் கறுப்பினத்தவருக்கு வலுவூட்டி கர்ஜித்தார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால் அவற்றை பார்ப்பதற்கு அவர் இருந்திருக்கவில்லை. ஆனால் அவர் விதைத்த வலுவூட்டல் இலட்சியத்தின் விதைகள் அவர் கூறியதைவிட பலமடங்கு வியாபித்தது என்பதே யதார்த்தம். இங்கே அந்த வலுவை ஒரு சமுதாயத்திற்கு விதைத்தவன் இல்லாமல்போனாலும் அவனது இலட்சியக்கனவுகள், அவன் ஊட்டிய வலுக்கள் எப்போதும் மரித்துப்போவது கிடையாது.

எண்ணங்கள் வார்த்தைகள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதால் பலிக்கும் என்ற எண்ணம் எங்கள் மூதாதையர்களுக்கும் இல்லாமல் இல்லை. அந்த மரபில் வந்தபடியேதான் இன்று யாராவது நம்மை பற்றி நல்லதாக பல தடவைகள் சொன்னால், உங்கள் வாய்க்கு இனிப்பு போடவேண்டும் என்றும், யாராவது திரும் திரும்ப அபசகுனமாக பேசினால் போய் வாயை கழுவுங்கள் என்று அதட்லாகவும் சொல்கின்றோம். இராமாயணத்தில் கடல்கடக்க அனுமன் தயங்கியபோது ஜாம்பவான் உட்பட சேனைகள் அத்தனையும் அனுமனை வலுவூட்டியதையும், மஹாபாரதத்தில் அர்ஜூனனுக்கு மதுசூதனன் கொடுத்த வலுவூட்டலையும் நாம் மறந்தவர்கள் அல்லர்.

உன்னால் முடியும் என்பது! என்னால் முடியும்!! என்று முழுமையாக நம்பப்பட்டால் அதை முடிப்பதற்கு இதைத்தவிர வேறு மந்திரங்கள் தேவை இல்லை. எவன் ஒருவன் ஒரு செயலை செய்ய தொடங்கும்போதும், எந்த இடர்வரினும் பின்வாங்காமல், நான் பின்வாங்குபவன் அல்ல!!! ‘என்னால் முடியும் என்று இறுதிவரை விடாமல் தன்னை நம்பி முயல்கிறானோ கண்டிப்பாக வெற்றி எனும்தேவதை அவனது அத்தனை வேர்களையும், சோதனைகளையும், அவமானங்களையும் வெற்றி மாலையை அவன்மேல்சூட்டி போக்கிக்கொள்வாள்.

வலுவூட்டல்கள் ஒருவனது மனதை எத்தனை வைராக்கியமாக்கின்றது என்பதற்கு இன்னும் ஒரு கதை: ஒரு பேரரசனை தோற்றுவித்த ஒரு தாயின் வலுவூட்டல் வார்த்தைகள்…..

கிறிஸ்துவுக்கு பின் 1162ஆம் ஆண்டு மொங்கோலியர்களின் மேற்குகரை மலைசாதிப் பிரிவினரின் தலைவனாக இருந்த ஒரு சிற்றரசனை இன்னொருபிரிவினர் சூழ்ச்சியால் விசம்கொடுத்து கொன்றுவிட்டனர். அடுத்ததாக தமது தலைவன் யார்? தம்மை வழிநடத்துவது யார்? என்ற பேதலிப்புடன் அந்த மக்கள் அல்லாடிக்கொண்டிருந்தனர். கொலை செய்யப்பட்ட அரசனின் மகனோ பதினொரு வயதான பாலகனாகவே இருக்கின்றான் எனவே அவனை தமது அரசனாக ஏற்பதை தவிர்த்தார்கள் அந்த குடியினர்.

ஆனால், அவனது தாயோ அவனை வெறும் சிற்றரசானாக அல்லாமல், நீ இந்த உலகின் பேரரசனாகப் பிறந்தவன், வெற்றி என்ற அன்னையின் குழந்தை நீ! உன்னால் முடியாதது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்ற சிந்தனைகளை ஊட்டியே வளர்த்தாள். அவனும் தன்னை ஒரு பேரரசனாக எண்ணிக்கொண்டே வளர்ந்தான். என்ன ஆச்சரியம் தாயின் ஒவ்வொரு வார்த்தையும் மகனிடம் செயல் வடிவில் பிரதிபலித்தன, குதிரையேற்றம், வாள்ப்பயிற்சி என்பவற்றில் தன்னிகரற்ற வீரசாகசம் புரிபவனாக திகழ்ந்தான்.

ஆம்… எப்போதும் அவனது பெயரை அவனது தாய் இப்படித்தான் உச்சரித்து வந்தாள்… என் வீர மகனே செங்கிஸ்கான்….. செங்கிஸ்கான் என்றால் ‘பேரரசர்களுக்கு எல்லாம் பேரரசன்’, உலகமே திரண்டு எந்து எதிர்த்தாலும் வெல்லமுடியாத மாவீரன் நீ என்பது உன் அர்த்தமாக இருக்கட்டும் என்பாள். மகனே…!!! செங்கிஸ்கான் என்ற பெயரை உச்சரிக்கவே உன் எதிரிகள் பயப்படவேண்டும். அப்படி ஒரு நிலை வந்துவிட்டாலே எதிரிகளின் பாதி பலம் குறைந்துவிடும். பலமான உன்னிடம் பயத்தோடு வந்து மோதும் எவனும் வெற்றிபெறமாட்டான். என ஒவ்வொரு முறையும் அவனை மெருகேற்றிக்கொண்டிருந்தாள்.

தனது பதினாறாவது வயதில் இருந்து செங்கிஸ்கானின் பராக்கிரமங்கள் சக்கரவர்த்தி தனங்களை காட்ட ஆரம்பித்தன. ஓரு காட்டுப்பாதையிலே எதிரிகளின் சூழ்ச்சியால் பரிவாரங்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனியாக மாட்டிக்கொண்ட அவனை 50 பேருக்கும் அதிகமானவர்கள் தாக்கத் தொடங்கினார்கள், அந்த 50 பேரையும் கொரூரமாக போராடிக்கொன்று தனது பரிவாரங்களை வந்தடைந்தவனைக்கண்டு அவனது பரிவாரங்களே பயத்தில் நடுங்கிநின்றன.

சிதறிக்கிடந்த மொங்கோலியாவை ஒன்றிணைத்து மொங்கோலிய சாம்ராஜ்ஜியத்தை அமைத்தான் செங்கிஸ்கான். மொங்கோலியாவின் எல்லைகள் விஸ்தரித்துக்கொண்டே சென்றன. அயல் நாடுகளை எல்லாம் சில நாட்களிலேயே போரிட்டு மொங்கோலியாவிடம் மண்டியிடவைத்தான் செங்கிஸ்கான்.

genghis khan

எல்லா இடத்தையும் கைப்பற்றிய செங்கிஸ்கானுக்கு தனது தேசத்தின் கீழே பரந்துவிரிந்துகிடந்த சீனா அச்சுறுத்தலாகவே கண்ணில் பட்டது. விடயமறிந்த சீனா வெள்ளைக்கொடியுடன் அவசரமாக தூதுவரை மொங்கோலியாவுக்கு அனுப்பியது. வெள்ளைக்கொடிக்கெல்லாம் இப்போது வேலையில்லை இதோ சீனாவின் எல்லைகளை கடந்துவிட்டேன் என்றான் செங்கிஸ்கான். செங்கிஸ்கான் தலைமையில் மொங்கோலியப்படைகள் சீனாவுக்குள் புகுந்து விளையாடியது. பல சீனர்களுக்கு கழுத்துக்கு மேலே தலை காணமற்போயிருந்தது. எங்கு பார்த்தாலும் இரத்த வெள்ளம் சீனாவே மரண ஓலத்தில் மிதந்துகொண்டிருந்தது. செங்கிஸ்கான் சீனாமுழுவதையும் தனது காலடிக்குக்கீழ் கொண்டு வந்தான். சீனப்படைகள், லட்சம் லட்சமாக அவனது பாதங்களை முத்தமிட்டு சரணடைந்தார்கள்.

இத்தனைக்கும் சீன தேசத்தின் போர் வீரர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சம், வந்த மொங்கோலியப்படைகளின் எண்ணிக்கை வெறும் முப்பதாயிரம். இந்த வெற்றியின் இரகசியம் என்ன?
வேறென்ன செங்கிஸ்கானின் தாயின் வார்த்தைகளில் இருந்த தைரிய மந்திரங்களே….

முன்னைய பதிவுகள்

நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..

நெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..

நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்

நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்

நெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்

நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்


2 thoughts on “நெஞ்சே எழு  7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…

 1. Nerujan

  சாதனையாளர்களின் ஒரு பலம்மிக்க அஸ்த்திரமே வலுவூட்டல்் வலுவூட்டல் என்பது சாதாரணமனிதர்களால் இலகுவாக செய்துவிட முடியாது ்்்்அது எல்லோருக்கும் இலகுவில் கிடைத்தும் விடாது அப்படி ஒரு பமான பயிற்சியாளர் தான் நீங்கள் ்நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம் என்றுதான் கூறவேண்டும் ்

  Reply
 2. Sutharshan

  மொங்கோலிய கதை தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமன்றி தமிழ் மக்களின் இன்றைய போராட்ட நிலைமைக்கும் பொருத்தமாக இருக்கிறது .

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *