நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க!
க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )
அன்றாடம் நாம் ஓய்வின்றி தூக்கமின்றி உழைக்க முயல்வது வெளிப்படையாகச்சொன்னால் பணத்திற்காகத்தானே! அப்படி என்றால் நாம் உழைக்கும் பணத்தை பற்றி எமக்கு என்ன திட்டம் உள்ளது?
அந்த பணம் எமக்கு எவ்வாறான விதத்தில் இலாபங்களை, உயர்வை சம்பாதித்து தரப்போகின்றது என்ற திட்டத்துடன் உழைப்பவர்களா நீங்கள்?
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் தமது ஊதியம் தொடர்பில் எந்தவொரு திட்டமும் இல்லாமலேயே செயற்பட்டுக்கொண்டிருப்பது தெரிகின்றது.
அனால் மறுபுறத்தே தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் நாளை என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே தமது சேமிப்பு, முதலீடு, காப்புறுதி, மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் என்பவற்றில் பணத்தை போடுகின்றனர். அத்தோடு நிலத்திலும் தங்கத்திலும் தமது பணத்தைப்போட்டு இலாபத்தை ஈட்ட நினைப்பவர்களும் இப்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பெரிய விடயங்கள், பெருமெடுப்பிலான பண முதலீடுகள், தொன் கணக்கிலான தங்கமுதலீடுகள், இலட்சக்கணக்கான பங்குகளை வாங்கி விற்றல், கோடிக்கணக்கான காப்புறுதியை பெறல் போன்றவற்றை பின்னர் விரிவாகப்பார்ப்போம்.
இப்போது நாம் பார்க்கப்போகும் விடயம் ஜஸ்ட்- எங்கள் மாதாந்த வருமானத்தைக்கொண்டு எங்கள் பணத்திட்டத்தை இடுவதைப்பற்றித்தான். இன்றே நமது என்று சொல்லிக்கொள்ளும் தைரியம். நாம் அனைவரும் வேலை செய்கின்றோம் உழைக்கின்றோம், அதற்கான வருமானத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எம்மில் பலபேர் அன்றாடம் காட்சியாக இருக்கின்றோம். அதற்கு மிகப்பெரும் முக்கிய காரணம் நமது மனம்தான். எம் எண்ணங்கள் எமக்கு மணி மனேஜ்மன்ட் பற்றி இடைக்கிடை பாடங்களை எடுத்தாலும்கூட மனம் அதை கேட்டுக்கொண்டிருப்பது இல்லை. எடுக்கும் சம்பளத்தை ஒரு பைசா மிச்சமில்லாமல் அந்த மாதத்தை கொண்டு செல்பவர்களே தோற்றுப்போனவர்கள் என்றிருக்க இன்னொரு வர்க்கத்தினர் 15ஆம் திகதியுடனே கைகடிக்க தொடங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.
இது ஆரோக்கிமானது அல்ல என்று அவர்களுக்கும் தெரியும் ஆனால் இப்போதுதான் நான் அப்படி ஆனால் நாளை நமதே என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் நம்முள் உண்டு. நாளை நமதே என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் ஏன் என்றால் நாளை நமதே என்று எம்.ஜி.ஆர். பாடும்போது இன்றே 99 வீதம் அவர் கையில் இருந்தது மீத ஒரு வீதத்திற்காகவே அவர் நாளை நமதே என்றார். நாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா?
பலருக்கு வங்கிக்கடன், கிரடிட்காட்இ எல்லாம் இருக்கும், ஆனால் மந்திலி இன்கம் பிளான் அறவே கிடையாது. வங்கி, வீட்டு, வாகன கடன்களை கட்டுவதிலும், கிரடிட்காட் கடன்களை கட்டுவதிலும் அவர்கள் படும் அல்லல்களை நாம் எம் கண்ணுர்டே கண்டிருக்கின்றோம். முக்கிமாக கடன் என்பது எமது எல்லை என்ன? எமது மீளளிப்பு நிலமை என்ன? மீளளிப்புக்கு போதுமான காலப்பகுதியா? என்பற்றை கணித்தே பெற்றுக்கொள்ளவேண்டும். இவற்றை கருத்திற்கொள்ளாதுவிடின் கண்டிப்பாக திண்டாட்டங்கள் தொடரும்.
சரி… இந்தக்கட்டுரை வாசிப்பவர் யாரோ ஒருவருக்காவது பிரயோசனமாகி அவர் இந்த நிதி திட்டத்தை பின்பற்றினால் அதுவே என் திருப்தி. நீங்கள் மாத வருமானம் 3000 ரூபா எடுப்பவராகவும் இருக்கலாம் 300,000 அல்லது அதற்கு மேல் எடுப்பவராகவும் இருக்கலாம். இதோ நீங்கள் செல்வந்தர் ஆவதற்கான மார்க்கங்கள் அல்ல, எப்போதும் பணக்கஸ்டம், சந்தோசம், தைரியம், நிதி ஸ்தரத்தன்மை தரப்போகும் மந்திரத்தை கற்றுக்கொள்ளப்போவதாக நினைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை படு ஸ்ரிக்காக இந்த திட்டங்களை உங்களுக்கு உகந்ததாக படுபவற்றை, அல்லது அத்தனை திட்டங்களையும் அமுலுக்கு கொண்டுவாருங்கள். எப்போதும் உங்கள் கை நிறைவானதாகவே இருக்கும்.
திட்டம் 01. கட்டாய சேமிப்பு
உங்கள் வருமானம் உங்களுக்கானதே அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாத வருமானம் அந்த மாதத்திற்கு மட்டுமானது அல்ல. மாத வருமானம் என்ற பெயரையே பலர் தவறாக புரிந்து வைத்திருப்பதே சேமிப்புக்கள், இல்லாதுபோவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முனதில் திடமான ஒரு முடிவை எடுத்துக்கொண்டு புதிதாக ஒரு சேமிப்புக்கணக்கினை சிறந்த வங்கியில் திறந்துகொள்ளுங்கள், கண்டிப்பாக தயவு செய்து ஏ.ரி.எம். கார்ட் அந்த கணக்கிற்கு வேண்டவே வேண்டாம். மாதம் உங்கள் வருமானத்தில் 30 வீதம் இந்த கணக்கில் கண்டிப்பாக விழுந்தே ஆகவேண்டும். அது எந்த கஸ்டம் வந்தாலும் பறவாய் இல்லை என்ற திடமான முடிவை எடுங்கள், இரண்டு ஒரு மாதங்கள் கஸ்டப்பட்டாலும் மூன்றாவது மாதத்தில் இருந்து பழக்கமாகிவிடும். உங்கள் அலுவலகத்தில் குறிப்பிட்ட இந்த 20 வீதத்தை மேற்படி வங்கி கணக்கிற்கு செலுத்தும் வசதி தொழில் தருணரிடம் இருந்தால் மேலும் சிறப்பானதாக இருக்கும். அத்தோடு. உங்களுக்கு கிடைக்கும் போனஸ்கள்மேலதிக வருமானத்தில் ஒரு பகுதி, ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை கழியாட்டங்களை கொண்டாடி பாழ்படுத்தாமல் இந்த கணக்கிற்கு தள்ளிவிடுங்கள்.
உங்கள் கண்முன்னாலே உங்கள் கணக்கில் பணம் ஏறிக்கொண்டிருப்பதை குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து நீங்கள் அவதானிக்க முடியும். மக்கிமானது இந்த செமிப்பு ஒவ்வொரு இலட்சத்தை அடையும்போதும் உடனடியாக எடுத்து குறைந்தது மூன்று மூன்று கால நிரந்தர வைப்பு திட்டத்தில் இட்டுக்கொண்டிருங்கள். எந்தக்காரத்திற்காகவும் இப்போது எடுப்போம் பிறகு போடுவோம் என்ற சாத்தானின் தூண்டுதலுக்கு இங்கே ஆட்பட்டு விடாதீர்கள். அடுத்த கட்டமாக இன்னும் பணம் சேரத்தொடங்கியவுடன் சுமாராக ஒன்றரை வருடத்தில் இரண்டு இலட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள்நிரந்தரவைப்புடன், வங்கி சேமிப்பு சான்றிதழ் ஒன்றையும் பெற்றுக்கொள்ளுங்கள், அவசர நேரங்களில் இந்த சான்றிதழ் உங்களுக்கு வங்கி கடன் (உங்கள் பணத்தை மிள எடுக்காமலே) எடுக்க ஏதுவானதாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார். சேமிப்பு கணக்கு புத்தகங்கள் அத்தனை வங்கியிலும் வைத்திருக்கின்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது எல்லா வங்கி புத்தகங்களையும், ஏ.டி.எம் களையும் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசையினால்தான் அப்படி அடுக்கி வைத்திருக்கின்றார் போல என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரது திட்டமோ வேறு விதமாக இருந்தது.
அவரது சம்பளம் வர ஒரு புத்தகம், அன்றாட செலவுகளுக்கு ஒரு புத்தகம், குடும்ப மருத்துவத்திற்கு ஒரு புத்தகம், கல்விச்செலவுக்கு ஒரு புத்தகம், மனைவிக்கு, உணவுக்கு, கழியாட்டங்களுக்கு, உடைகள் கொள்வனவுக்கு, இப்படி என ஒவ்வொரு தேவைக்கும் செமிப்பு தவிர்ந்த பணத்தை இவ்வளவுதான் என்ற திட்டத்துடன் பிரித்து பிரித்து சம்பள நாளே போட்டுவிட்டு, தனது பேர்சில் சிறு தொகை பணத்தையே வைத்துக்கொண்டு அனைத்தையும் குறிப்பிட்ட கணக்குகளின் வங்கி காட்களையே பயன்படுத்தி வருகின்றார். இதன்மூலம் தன் பணச்செலவுத்திட்டம் பெருமளவு குறைந்ததாகவும் தான் சேமிக்க கூடியதாக இருப்பதாகவும் கூறினார். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாகுமோ தெரியாது.
ஓன்றை நிதானமாகக்கவனித்திருக்கின்றீர்களா? மழைகாலம் வரப்போகும் அறிகுறிகள் தெரிந்தவுடன் எறும்புக்கூட்டங்கள் விரைவாக தாம் வைத்திருந்த தமது உணவுக்கான பண்டங்களை தூக்கிக்கொண்டு தரையில் இருந்து மேல் இருக்கும் பகுதிகளுக்கு விரைவாக ஊர்ந்து சென்கொண்டிருக்கும். அதேபோல தேனீ இருக்கின்றது அல்லவா, நாளாந்தம் பல இலட்சம் பூக்கள் பூக்கின்றது தானே நாளை தேன் கிடைக்காமலா போய்விடப்போகின்றது என்று அது ஒரு போதும் அலுத்து படுத்திருந்ததில்லை. மாறாக எத்தனையோ கிலோ மீற்றர் தாரம் பறந்து சென்று தேன் உண்டுவிட்டு, நாளைகளுக்கான தேனை தனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.
அதேபோலத்தான் வயல் வெளிகளில் வாழும் அகளான் என்ற எலி இனம், தன் வளைகளில் மூட்டைக்கணக்கான நெற்கதிர்களை சேர்த்துவைத்திருந்து விதைப்பு அற்ற காலங்கள், மழைக்காலங்களில் தான் சேமித்தவற்றை உண்டு உயிர்வாழ்கின்றது. இந்த எறும்பு, தேனீ. அகளான் என்று மூன்றறிவு. நான்கறிவு உயிரினங்களுக்கே நாளைகளுக்கான சேமிப்பு பற்றிய அறிவு மிகச்சரியாகத்தெரிகின்றது என்றால் எல்லாம் தெரிந்தவர்களான மனிதர்களான நாங்கள் எப்படி இருக்கவேண்டும்? சில வங்கிகள் சேமிப்பு வாரம் என்று குறிப்பிட்ட ஒரு வாரத்தை அறிமுகப்படுத்தி சேமிப்பினை ஊக்கப்படுத்தி வருவதை கவனித்திருப்பீர்கள். முக்கிமாக ஒன்றை கவனித்திருப்பீர்கள் என்றால் முதலாம் உலக நாடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்க நீங்கள் தான் குறிப்பிட்டளவு பணத்தை செலுத்தவேண்டிய தன்மை காணப்படுகின்றது. ஆனால் நம் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே எமது சேமிப்புக்கு வட்டியும் தந்து, மேலதிகமாக பரிசுக்குலுக்கல்களையும் தருகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
திட்டம் 02 – பொற்சேமிப்பு
1990 ஆம் ஆண்டு ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி என்ன என்பதையும் 21 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அதே ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்துப்பாருங்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய விலையில் குறைந்தது ஐந்து மடங்காவது தங்கத்தின் விலை உயர்வடையும் என்பது திண்ணம். எனவே உங்கள் நாளை முன்னேற்றம் சேமிப்பு என்பதற்கான பொற்சேமிப்புத்திட்டத்தை சிறிதாக தொடங்குங்கள். மாதாந்தம் அரை கிறாம் தங்கம்வீதம் வாங்க ஒரு மஸ்தீப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் இது கஸ்டம் என்று எழுந்தமானமாக நினைத்துவிடாதீர்கள். முயற்சிசெய்தவர்கள் பலர் வெற்றிபெற்றுள்ளார்கள். மாதாந்தம் அரை கிராம் தங்கம் உங்கள் சேமிப்பு பெட்டகத்தினுள் சென்று கொண்டிருக்கட்டும். (வருமானம் குறைந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு அரை கிராம் பவுண் வீதம் என வாங்கிக்கொள்ளலாம்) எப்படி வாங்குவது என்று நினைக்கவேண்டும் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு கிராம், அரைக்கிராம் டாலர்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு மழைத்துழிகளும்தான் பெருவெள்ளமாக மாறிவிடுவதுபோல மாதாந்த உங்கள் தங்கச்சேமிப்பு நாளடைவில் தங்கப்புதையலாகவே உங்களுக்கு காட்சிதரும். நாளை எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணவேளைகளில் இது பாரிய ஒரு உதவியாக உங்களுக்கு நிற்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சுமார் ஒரு வருடம் கஸ்டப்பட்டு சேர்த்தீர்களே அனால் அதன் பின்னர் அந்த பெட்டகம் தங்கத்தால் நிறைவேண்டும் என்று நீங்களே முண்டியடித்து ஒவ்வொருமாதமும் ஒரு கடமையாக ஒவ்வொரு அரை கிராமையும் போட தொடங்கிவிடுவீர்கள். குறிப்பிட்டளவு டாலர்கள் சேர்ந்தவுடன், சிறப்பான வங்கி ஒன்றின் சிறு லொக்கரை வாடகைக்கு பெற்று பாதுகாப்பு நிமித்தம் மாதாந்தம் அதற்குள் உங்கள் டாலர்களை போட்டுவரலாம். புதையல் தங்ககாசுகள் என்றெல்லாம் கற்பனை கதைகளில் வரலாம், அனால் இங்கே உங்களுக்கான புதையலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.
திட்டம் 03 – காப்புறுதி
எங்கள் சேமிப்பு, மேம்பாடு, முயற்சிகள் எல்லாமே நாளைய என்ற ஒன்றுக்காகவே, அனால் துரதிஸ்டவசமாக நாளை என்ற ஒன்று எமது கைகளில் இல்லை. ஆனால் எம்மில் பெரும்பாலானோருக்கு காப்புறுதி என்றவுடன், இறந்தவுடன் காசு என்ற எண்ணமே எற்படும் அதில் தவறும் பெரிய அளவில் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் பார்க்கப்போனால் காப்புறுதியே ஒருவரின் நிம்மதியான அதேநேரம், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றது. ஏன் என்றால் குறிப்பிட்ட ஒரு தொகைக்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாம் எமக்கான ஆயுள் காப்புறுதி ஒன்றை பெற விளைகின்றோம், ஒப்பந்தகாலம் முடிந்தால் அதன் முதிர்வையும் கட்டிய பணத்திற்கான போஸையும் பெறுகின்றோம் அனால் திடீர் என்று எமக்கு ஒன்று நேர்ந்தால் எம் குடும்பத்தாரின் கதி! என்ற அச்சத்திற்கு ஆறுதலான முதலீடே காப்புறுதி. ஆனால் இன்று காப்புறுதியில் பல புதிய புதிய திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் எற்றவாறாக வந்துள்ளமை சிறப்பான ஒரு அம்சமாகும். அத்துடன் முக்கியமான ஒருவிடயம் காப்புறுதிக்கு அரசாங்கத்தில் வரி விலக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது. இதேவேளை சாதாரணமாக நாம் வைத்தருக்கும் வாகனத்திற்கே காப்புறுதி என்பது மிக முக்கிமானதாக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அதை ஓட்டும் நாங்கள் எங்களுக்கு ஒரு காப்புறுதியை பெற்றுள்ளோமா என்று நினைக்கவேண்டும். தொழில் செய்யும் ஒருவரும் குறைந்தது ஒரு மில்லியன் கவர் தரும் காப்புறுதியை பெற்றிருக்கவேண்டியுள்ளது இன்றைய காலத்தில். காப்புறுதியை பெறும்போது முக்கிமாக செய்யவேண்டிய ஒன்று காப்புறுதிப்பணம் கட்டப்படாமல் அது செயலிழக்க செய்வதை தவிர்க்க, எம் சம்பளத்தில் இருந்து தானாக அந்த கட்டுப்பணம் செத்தும் முறையினையோ, அல்லது வங்கி நிலையியல் கூற்றின் படியோ காப்புறுதிப்பணம் செலுத்துவதே ஆகும். இதன் மூலம் தேவையில்லாத அசௌகரியங்களை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.
திட்டம் 04- கடன்களை தவிர்த்தல்
‘கடன் கொடுப்பதும் தப்பு, கடன் வாங்குவதும் தப்பு’ என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா. ஆனால் ஒருவகையில் இதுவே சிறப்பான ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இராமாணயத்திலே கூட போரிலே தோற்ற இராவணனின் நிலையினை பாட எத்தனித்த கம்பர், ‘கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்’ என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்துப்பாருங்கள். கடன் என்பது ஒரு திடீர் நிவாரணியாகத்தெரியலாம் ஆனால் அதுவே பாரிய சுமையாகவும், முன்னேற்றத்தடையாகவும் இருந்துவிடுகின்றது. அதனால் கூடுமானவரையில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கட்டாய சேமிப்பு பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடமும் கடன் பெறவேண்டிய தேவை உங்களுக்க இல்லை என்பதுடன் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியாது என்பதுவுமே உண்மை. சரி……. இந்த நான்கு திட்டத்தையும் கடைப்பிடித்துப்பாருங்கள், சகல வெற்றிகளும் அடுத்தடுத்து உங்கள் கைகளை வந்தடைவது சத்தியம்.
முன்னைய பதிவுகள்
நெஞ்சே எழு 9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்
நெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்
நெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…
நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..
நெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..
நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்
நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்