நெஞ்சே எழு 11 – தவறவிடும் தவறுகள்
க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )
ஞானிகளும் பேரறிஞர்கள் சிலரும்கூட சிலநேரங்களில் தவறு செய்துவிடுகின்றனர். பின்பு அவர்கள் செய்த தவறுக்காக வருந்துகின்றனர். யாருக்கு தான் செய்த தவறுகள் பிழைகள் எனப் புலப்படுகின்றனவோ அவனும் நல்ல மனிதனே!
தாம் செய்வது பிழை என்பது தெரிந்த பின்னரும் அது சரி என வாதிடுபவர்களே இப்போது அதிகமாக உள்ளனர்.
தான் ஒரு குற்றம் செய்தால் கடுகுபோலவும், மற்றவர்கள் செய்தால் பூசினிக்காய்போலவும் நினைப்பவர்கள் சிலரும் உண்டு.
இத்தகயவர்கள் தமது வாழ்வில் எப்போதும் வெற்றிபெறப்போவதில்லை. ‘எனக்கு தெரியாததை தெரியாது என ஒப்புக்கொள்வதற்குப் பெயர்தான் அறிவு’ என்றார் சிந்தனையாளர் கன்பியூசியஸ்.
குற்றத்தை செய்துவிட்டு ஒப்புக்கொள்ள மனமில்லாமல் மனதுக்குள் எப்போதும் சஞ்சலப்படுபவர்கள் சிலரும் உண்டு. பலரின் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டால் தாங்கள் எல்லோராலும் குற்றவாளிகளாகவே பார்க்கபபடுவார்களோ, தங்களை தாழ்வாக மதிப்பிட்டுவிடுவார்களோ, என்ற மனநிலையே அவர்களை வாட்டும். குற்றமில்லாத நெஞ்சம்தான் எப்போதும் அமைதியாக இருக்கும்.
‘பிறரது குற்றங்களைப்பற்றி ஒருக்காலும் பேசாதே, அவை கெட்டவையாகினும் சரி, அதனால் யாதொரு பயனும் விளையப்போவதில்லை. ஒருவனுடைய குற்றத்தைப்பற்றிப் பேசுவதால் அவனுக்கு ஒரு நாளும் உதவிசெய்தவனாகாய், நீ அவனுக்கு கேடு விளைவிக்கின்றாய், உனக்கு கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றாய், உனக்கும் கேடிழைக்கின்றாய் என்றார் சுவாமி விவேகானந்தர்.
நான் இப்போது தவறு செய்துவிட்டேன். ஆனால் நான் செய்த இந்தத்தவறில் இருந்து பல படிப்பினைகளை கற்றுக்கொண்டுவிட்டேன். இனிமேல் இது போன்ற தவறுகள் ஏற்படாதபடி என் வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன். இப்படி பெரும் தன்மையுடன் தமது குற்றங்களை ஒப்புக்கொள்வதற்கு ஒருபோதும் தயங்குதல் கூடாது.
நீங்கள் செய்யும் எந்தக்குற்றத்திற்காகவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டிக்கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் செய்யும் குற்றகளை பலர் தெரிந்துகொள்ளாதபடி பார்த்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் செய்யும் சிறு குற்றத்தைக்கூட உங்கள் மனச்சாட்சியிடமிருந்து ஒழித்துவிடமுடியாது. மனச்சாட்சியே உங்கள் குற்றங்களை நீங்கள் இறக்கும் நாள்வரை உங்களுக்குள் இருந்தே உங்களை வாட்டியவண்ணம் இருக்கும்.இனியேனும் சிறு குற்றமோ, அல்லது மகா பாதகமோ? குற்றம் என்று தெரிந்தவுடன் அதை ஒத்துக்கொள்ளுங்கள் மனம் மலர்வதையும், உங்கள் வாழ்க்கை செம்மைப்படுத்தப்படுவதையும் காண்பீர்கள்.
குற்றங்கள் எதுவும் செய்யாத மகாத்மாக்கள் என்று இந்த உலகத்தில் இருப்பவர்கள் இருவர்தான் ஒருவர் இறந்துவிட்டார் இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை என்கின்றது ஒரு தத்துவம். இங்கு யாரும் 100 வீதமான உத்தமர்கள் இருக்கவில்லை இருந்துகொண்டும் இல்லை என்பதே யதார்த்தம்.
தாம் குற்றம் புரிந்துவிட்டோம் என்ற மனநிலை பல தற்கொலைகளுக்கும் தூண்டுதலாக இருந்திருக்கின்றமையினை பல தோல்விகளின் நிமித்தம் தற்கொலை செய்துகொண்டவர்களின் செய்திகளை படிக்கும்போது புரிந்துகொண்டிருப்போம்.
இந்த உலகத்தில் நாம் மூக்கின் மேல் விரலைவைத்து பிரமித்துப்பார்க்கும் சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் தவறுகளை புரிந்தவர்கள்தான், ஆனால் அவர்கள் இன்று முன்னேறி நிமிந்து நிற்பதற்கான காரணங்கள், தமது தவறுகளை நினைத்து வருந்திக்கொண்டிருக்காமல், தைரியமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, தமது தவறை திருத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்களே..
தவறுகளின் சிகரம் என வர்ணிக்கப்படுபவர் தொமஸ் அல்பா எடிசன் அவர்கள், தனது ஆராட்சிகளின் போது பல தவறான வழிமுறைகளில் பல தடவைகள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவர். இத்தனை தவறான ஆராட்சிகள் ஏன் செய்தீர்கள் என கேட்டபோது, அத்தனை தடவையும் சரியானதை விட்டு தவறான ஆராட்சிகளை இப்படி செய்யக்கூடாது என்ற தகலை தான் கற்றுக்கொண்டதாகவும். தவறுகளின் மூலம் தான் தவறாமல் பாடம் கற்றுக்கொண்டதாகவும் சொல்லியிருந்தார். அதனாலேதான் மிக பெறுமதியான அவது ஆய்வுகூடம் தீப்பெற்றி எரிந்துகொண்டிருக்கும்போது கூட, ஆய்வுகூடம் மட்டும் அல்ல என் தவறுகளும் சேர்ந்தே எரிகின்றது என்றார்.
தவறுகளும் பெரும் வரங்களாகும் சரித்திரங்கள் இந்த உலகத்தில் நடக்காமல் போனது கிடையாது. தவறுகளைக்கூட இன்னொரு பரினாமத்திற்கு இட்டுச்சென்று அந்தப்பரினாமத்தில் வெற்றி பெறமுடியுமா? என சிந்திப்பவனுக்குப்பெயர்தான் விவேகி. உங்கள் ஒவ்வொரு தவறுகளினபோதும் நீங்கள் விவேகி ஆக முயற்சித்தது உண்டா?
1886 ஆம் ஆண்டு மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தலைவலிக்கான திரவமருந்து ஒன்றை உருவாக்கினார். அதை நோயாளிகளுக்கு அளித்தபோது, அதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை. மனமொடிந்து போய் இருந்த அந்த மருந்து தயாரிப்பாளர், தன்னை சந்திக்கவந்த நண்பர் ஒருவருக்கு பானம் கொடுப்பதற்குப்பதில் தனது புதிய மருந்தை பானம் என கொடுத்துவிட்டார். ஆனால் அதை அருந்திய அவரது நண்பர், இந்தப்பானம் வித்தியாமான சுவையாக இருப்பதாகவும் தனக்கு இன்னும் ஒரு குவளை பானம் தருமாறும் கேட்டார்.
அந்த மருந்து தயாரிப்பாளரும் மிச்மிருந்த அந்த மருந்தினுள், ஐஸ்கட்டிகளை இட்டும், தண்ணீருக்குப்பதிலாக மீண்டும் ஒரு தவறாக அருகில் இருந்த வெற்று சோடா திரவத்தையும் ஊற்றிவிட்டார். மருந்துக்குப்பதில் ஒரு சுவையான குளிர்பானத்தை அந்தக்கணத்தில் உருவாக்கினார் அவர்.
இப்படி எதேச்சையாக தயாரான தனது வித்தியாசமான குளிர்பானத்தை எப்படியாவது விற்று சாசு பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தார் அவர். தொடக்கத்தில் அவரது குளிர்பானம் எதிர்பார்த்த வெற்றியினைப்பெறவில்லை. அதற்குக்காரணம் அதன் பெயர்தான் என எண்ணிய அவர், அந்த நிறுவனத்தை விற்றுவிட்டு ‘ரொஸ்பெரி கோலா’ நிறுவனம் என புதியதொன்றை ஆரம்பித்தார். அப்படி தோல்விக்குகாரணம் அதன்பெயர்தான் என்று விற்ற அந்தப்பெயர்தான் கொக்கா கோலா…
இத்தனை தவறுகளில் உருவான இந்த கொக்கா கோலா நிறுவனம் செய்த இன்னும் ஒரு தவறு இன்று இன்னும் ஒரு பெரும் போட்டி நிறுவனத்தை வளர ஏதுவாக அமைந்துவிட்டது. கோக் நிறுவனம் பெரும் வெற்றிபெற்றதன் பின்னர் சார்லஸ் க்ரூத் என்பவர் தனது நட்டமடைந்த குளிர்பான நிறுவனத்தை வெறும் ஆயிரம் டொலர்களுக்கு கொக் கோலா நிறுவனத்திற்கு விற்க முன்வந்தார். ஆனால் குளிர்பான உலகத்தில் போட்டியே இன்றி ஏகபோக வெற்றிக்கொடி கட்டிக்கொண்ட கோலா நிறுவனம் உங்கள் நட்டமடைந்த நிறுவனம் எங்களுக்குத்தேவையில்லை என அறிவித்தது. ஆனால் கொக் கோலா நிறுவனத்திற்கு அன்று தெரியவில்லை அந்த நட்டமடைந்த சிறு நிறுவனம்தான் பின்றாளில் தனக்கு நேர்ப்போட்டியாளனாக வரப்போகும் பெப்ஸி என்று!
முன்னைய பதிவுகள்
நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க!
நெஞ்சே எழு 9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்
நெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்
நெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…
நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..
நெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..
நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்
நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்